ஒப்பந்த மருத்துவர் : ஓய்வூதிய சட்டத் திருத்தங்களைச் சிறப்பு பணிக்குழு ஆராயும் – நூர் ஹிஷாம்

மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) மற்றும் சுகாதார அமைச்சு தலைமையிலான சிறப்பு பணிக்குழு ஓய்வூதியச் சட்டத் திருத்தங்களை ஆய்வு செய்து, 23,000 மருத்துவர்களுக்கு இரண்டு ஆண்டு கால ஒப்பந்த நீட்டிப்புகளுக்கும் ஊழியர் சேமநிதி வாரியப் (ஈபிஎஃப்) பங்களிப்பு வழங்கப்படும் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்தார்.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த விஷயத்தை முழு மனதுடன் ஆதரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். திருத்தத்திற்காகக் காத்திருக்கும்போது, ​​அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களும் முதுநிலை மட்டத்தில் தங்கள் படிப்பைத் தொடரலாம். இரண்டு ஆண்டுகளில் அல்லது அதற்கும் குறைவாக, அவர்கள் ஈபிஎஃப் திட்டத்தின் கீழ் நிரந்தரப் பதவிகளில் அமர்த்தப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

“ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஓர் சிறந்த பணிச்சூழலையும் எதிர்காலத்தையும் பெற போராடும் போது, ​​நாம் பாதிக்கப்படலாம்.

“இந்தக் கடினமானக் காலங்களில், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை விட, பல்வேறு தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை மூலம் ஒரு நல்ல தீர்வை எட்ட நான் தேர்வு செய்வேன்,” என்று நேற்று இரவு கீச்சகம் வழி அவர் கூறினார்.

சுகாதார அமைப்பில் மேம்பாடுகள் மற்றும் சுகாதார ஊழியர்களின் நலன் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென, 2019 ஜூலையில், நாடாளுமன்றத்தில்  அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும் கருத்து தெரிவித்த டாக்டர் நூர் ஹிஷாம், இது நாட்டில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுவரும் ஒரு பிரச்சினை என்றார்.

-பெர்னாமா