இராகவன் கருப்பையா – கோறனி நச்சிலின் பெருந்தொற்று பல நாடுகளில் இப்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள வேளையில் நம் நாட்டில் அதன் சீற்றம் வரம்பு மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.
அண்டை நாடுகளான சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் முதலிய நாடுகளின் தலைவர்கள் தங்களுடைய சிந்தனை ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி இக்கொடிய நோயைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் நம் நாட்டின் நிலைமை இப்போது மிகவும் மோசமாக உள்ளதால் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் கோபம் உச்சத்தில் உள்ளதை நம்மால் காணமுடிகிறது.
பிரதமர் மஹியாடினின் அமைச்சரவை தகுதியும் திறமையும் இல்லாதவர்களைப் பெருவாரியாகக் கொண்டு நாட்டை படு மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டி சமூக வலைத்தளங்களில் பொது மக்கள் மானாவாரியாகத் திட்டித் தீர்க்கின்றனர்.
எதிர்கட்சித் தலைவர்களும் மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் கூட எவ்வளவோ யோசனைகளையும் கருத்துகளையும் அரசாங்கத்திடம் தாராளமாக முன் வைத்துள்ள போதிலும் அவை எல்லாமே ‘செவிடன் காதில் ஊதிய சங்குதான்.’
இந்நிலையில் வேறு வழியே இல்லாமல் சில சமூக ஆர்வலர்களையும் முன்னணி அரசியல்வாதிகளையும் கொண்ட குழுவொன்று சுகாதார அமைச்சர் அடாம் பாபாவுக்கும் சம்பந்தப்பட்ட இதர அமைச்சுகளுக்கும் எதிராகக் காவல் நிலையத்தில் செய்துள்ள புகார் இந்நாட்டில் முன்னோடியில்லாத ஒரு விசயம்தான்.
அடாம் பாபாவின் கவனக்குறைவினால் நோய்த் தொற்று துரிதமாகப் பரவி மிக அதிகமானோர் மரணிக்கின்றனர் என மனித உரிமை போராட்ட வாதிகளான வழக்கறிஞர் அம்பிகா ஸ்ரீனிவாசன், மரினா மகாதீர், கிளேங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, செகாம்புட் உறுப்பினர் ஹன்னா இயோ, பெட்டாலிங் ஜெயா உறுப்பினர் மரியா சின் ஆகியோரோடு மேலும் பலரையும் உள்ளடக்கிய அக்குழு தலைநகர் பந்தாய் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளது.
இவர்கள் அனைவருமே தத்தம் துறைகளில் அதிக பாண்டியத்து பெற்றவர்கள். மிகவும் கவனமாக பரிசீலித்த பின்னரே இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள். எனவே காவல் துறையும் சட்டத்துறை அலுவலகமும் இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு இவ்விசயத்தில் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது.
நாட்டின் தற்போதைய மோசமான நிலைமைக்குப் பொறுப்பேற்று அரசாங்கம் பதிலுரைக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் பிரதமர் மஹியாடின், துணைப் பிரதமர் இஸ்மாய்ல் சப்ரி, அனைத்துலக தொழில்துறை அமைச்சர் அஸ்மின், அடாம் பாபா மற்றும் முன்னாள் பிரதமர் மகாதீர் ஆகிய எல்லாரையும் பொது மக்கள் சகட்டு மேனிக்கும் சாடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பொறுப்பற்ற வகையில் மகாதீர் பதவி விலகியதுதான் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் அடித்தளம் என ஒரு சாராரும் கொல்லைப்புறமாக வந்து அரசாங்கத்தை கைப்பற்றி அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த பிரதமர் பதவியை ‘உடும்புப் பிடி’யாக பிடித்துக் கொண்டிருக்கும் மஹியாடினின் சுயநலம்தான் இதற்குக் காரணம் என பிரித்தொரு சாராரும் வாதிடுகின்றனர்.
நோன்பு பெருநாளுக்கு முன்னுமான ரமலான் சந்தைகளை விடியற்காலை 2 மணி வரையில் திறந்து வைத்திருப்பதற்கு அனுமதித்த இஸ்மாய்ல் சப்ரிதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என பொது மக்களில் பலரும், தேசிய அளவில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் 140,000கும் மேலான தொழில்துறைகள் தொடர்ந்து சேவையில் இருக்க அனுமதி வழங்கிய அஸ்மினின் தான்தோன்றித்தனமே இவை அனைத்துக்கும் காரணம் என மற்ற பலரும் தங்களுடைய சினத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.
அடாம் பாபாவையும் அவருடைய துணையமைச்சர் நோர் அஸ்மியையும் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவ்விருவரும் தங்களுடைய கோமாளித்தனமான அறிக்கைகளினால் மக்களுக்கு மேலும் மேலும் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் வாயைத் திறக்காமலிருந்தாலே போதும் என பொது மக்கள் சாடும் அளவுக்கு உள்ளது இவர்களுடைய பேச்சும் நடவடிக்கைகளும்.
தடுப்பூசி நடவடிக்கைகள் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் இதுவரையில் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 16 விழுக்காட்டினருக்கு மட்டுமே 2 தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன.
எனவே அண்மைய வாரங்களாக மரண எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருவதற்குக் காரணம் தடுப்பூசி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் கைரியின் மந்தமான போக்குதான் என மேலும் பலர் குமுறுகின்றனர்.
மூச்சு திணறல்களுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரில் நிறையப் பேர் வீடு திரும்புவதில்லை.
அரசு மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இல்லாததால் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோரின் குடும்ப பந்தங்கள் ஒரு நொடியில் உடையும் அவலம் இப்போது தலைவிரித்தாடுகிறது.
நாடளாவிய நிலையில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பு படுக்கைகளின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 30,000 பேருக்கு 1 எனும் விகிதம் காலத்திற்கு ஏற்று மேம்படுத்தப்படவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டின் மதுரை நகரில் 72 மணி நேரத்தில் 500 தீவிர கண்காணிப்பு படுக்கைகளை அம்மாநில அரசு நிர்மாணித்தது குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டிலும் கூட போதுமான வளங்களும் பண வசதியும் உள்ள போதிலும் அம்மாதிரியான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான சிந்தனை ஆற்றல் சம்பந்தப்பட்டோரிடம் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
எது எப்படியாயினும் சொல்லொன்றா துயரை எதிர்கொண்டிருக்கும் பொது மக்களின் கோபத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஏனெனில் அரசியல் சுயநலத்தை முன்வைத்து இவர்கள் அனைவருமே மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஏதாவது ஒரு வகையில் நிலைமையை மோசமாக்குவதற்கு வழி வகுத்துள்ளது எனும் உண்மையை மக்கள் உணராமல் இல்லை.