‘மருத்துவர்களிடம் விசாரணை செய்யப் பொருத்தமான இடம், நேரம் இல்லையா?’

ஒப்பந்த டாக்டர்கள் ‘ஹர்த்தால்’ இயக்கம் சார்பாக செயல்படும் வழக்கறிஞர் ஒருவர், அதிகாலையில், மலேசிய செர்டாங் வேளாண் பூங்காவில் (மேப்ஸ்), சுகாதார ஊழியர்களிடம் விசாரணை நடத்தியக் காவல்துறையினரின் சமூக அக்கறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவிட் -19 தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்களிடம் விசாரணை அறிக்கையைப் பதிவு செய்ய, காவல்துறையினர் பொறுத்தமான நேரத்தைத் தேர்வு செய்யவில்லை என்று வழக்கறிஞர் ஆஷீக்கின் அலி சேத்தி அலிவி கூறினார்.

“அதிகாலையில், போலிசார் வந்து விளக்க அறிக்கையை வழங்குமாறு அவர்களை அறிவுறுத்தியுள்ளர்.

“காவல்துறை அக்கறை கொண்டது என்பது உண்மை என்றால், இந்த மருத்துவர்கள் சாட்சியமளிக்கப் பொருத்தமான நேரத்தைத் தேர்ந்தெடுக்க அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக, மாப்ஸில் உள்ள மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 17 சுகாதார அமைச்சின் ஊழியர்களை, நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 3.45 மணி வரையில் காவல்துறையினர் விசாரித்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டது.

திங்கட்கிழமை நடந்த வேலைநிறுத்தம் குறித்த விசாரணை அதுவல்ல என்று போலீசார் தெரிவித்தனர். ‘கைது செய்யப்படுவீர்’ என்று அச்சுறுத்தியதால், மேப்ஸில் உள்ள சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பதிலாக, வேலைநிறுத்தம் நடக்கும் என்று எதிர்பார்த்து, அந்தப் பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படும் ஆறு ஊடக ஊழியர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அர்ஜுனைடி முகமதுவும், இரவு நேரத்தில் பணிபுரிபவர்களுக்கு வசதியாக, இரவில் தாமதமாக விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறினார்.

“நாங்கள் அக்கறையுள்ளவர்கள், மேப்ஸ் நிர்வாகக் குழுவின் அனுமதியுடன், அவர்கள் வேலை நேரத்தில் ஒவ்வொருவரையாக நாங்கள் விசாரித்தோம்,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், போலிஸ் நடவடிக்கை மன்னிக்க முடியாதது மற்றும் சட்டத்திற்கு எதிரானது என்று ஆஷீக் ஆட்சேபித்தார்.

“இரவின் பிற்பகுதியில் அல்லது அதிகாலையில் எடுக்கப்பட்ட சான்றுகள் சட்டத்திற்கு எதிரானது, அத்தகைய நடவடிக்கையைத் தற்காக்க முடியாது.

“அதிலும், கோவிட் -19 தனிமைப்படுத்தல் மையத்தில், மருத்துவர்கள் பணியில் இருந்தபோது, இது மோசமான நடவடிக்கையாகும்.

“சுகாதார அமைச்சும் காவல்துறையும் இந்த மருத்துவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் மற்றும் பணிச்சுமை குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

“இதன் காரணமாக, அத்தகைய ஆதாரங்களை எடுப்பது சட்டத்திற்கு எதிரானது என்றும் மருத்துவர்களை அச்சுறுத்துவதற்கானது என்றும் நான் உறுதியாகக் கூறுகிறேன்.

“இதுபோன்ற நேரங்கெட்ட நேரத்தில் விளக்க அறிக்கைகளைப் பதிவு செய்வதைக் காவல்துறை நிறுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.