‘110-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர்’

நாடாளுமன்றத்தின் 222 உறுப்பினர்களில், 110-க்கும் மேற்பட்டவர்களின் ஆதரவு அரசாங்கத்திற்கு இன்னும் உள்ளது என்று இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“110-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இன்றைய அரசாங்கம் கொண்டுள்ளது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

“எனவே, தற்போதைய சூழ்நிலையை உணர்ந்து, மக்கள் அமைதியாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன், இந்த அரசியல் நெருக்கடி உடனடியாக முடிவடைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்,” என்று புதிதாக நியமிக்கப்பட்ட துணைப் பிரதமர் கூறினார்.

மாமன்னரின் ஒப்புதல் பெறாமல், நாடாளுமன்ற விவாதம் இல்லாமல், அவசரகாலக் கட்டளைகளை இரத்து செய்வதை, அரண்மனை விமர்சித்ததை அடுத்து இந்த வலியுறுத்தல் செய்யப்பட்டது.

சுருக்கமான நான்கு பத்தி அறிக்கையில், இஸ்தானா நெகாரா ஊடக அறிக்கை மூலம் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் உத்தரவை உறுதிசெய்வதாக இஸ்மாயில் கூறினார்.

நாட்டின் இன்றைய அரசியல் நிலைமை நிலையற்றது என்றும் இஸ்மாயில் விவரித்தார்; இது பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகளையும் கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரானப் போராட்டத்தையும் பாதிக்கும் என்றும் அவர் சொன்னார்.