விசாரணைக்கு ஆஜரான, செயற்பாட்டாளர் சாரா இர்டினா முகமது ஆரிஃப், 20, தேசத்துரோகச் சட்டம் மற்றும் வலைத்தள வசதிகளைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த விசாரணை, #லாவன் இயக்கம் குறித்து, சோலிடாரிட்டி மிஷன் இளைஞர் குழுவினரின் ஒரு சமூக ஊடக இடுகையுடன் தொடர்புடையது.
சாராவின் வழக்கறிஞர் கோ சியா யீ, புக்கிட் அமான் வழக்கு மற்றும் சட்டப் பிரிவின் (டி5) அதிகாரிகள் சாராவை டாங் வாங்கி மாவட்டக் காவல் நிலையத்தில் விசாரித்த பின்னர் தடுத்து வைத்ததாக மலேசியாகினியிடம் கூறினார்.
அவரது கைப்பேசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
“அவர் ஜிஞ்ஜாங் தடுப்பறையில் ஓரிரவு தடுத்து வைக்கப்படுவார் […]
மாலை 6:15 மணியளவில் சாராவின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.
“ஆணைப் பத்திரம் ஏதும் இல்லாமல்,” கோ மேலும் கூறினார்.
1948-ஆம் ஆண்டு, தேசத் துரோகச் சட்டம் பிரிவு 4 (1) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233-இன் கீழ் சாராவைப் போலீசார் விசாரிக்கின்றனர்.
சோலிடாரிட்டி மிஷன் என்பது “மலேசியாவில், நேரடி நடவடிக்கைகளின் மூலம் சமூகத்தை மேம்படுத்துவதற்கான இளைஞர்கள் சார்ந்த கூட்டு அமைப்பு” ஆகும்.
சாராவின் கைது குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பின்னர், பல குழுக்கள் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, அவரை விடுவிக்க அழைப்பு விடுத்தன.
#லாவான் இயக்கத்தின் அமைப்பாளரான மக்கள் ஒற்றுமை செயலகம் (எஸ்.எஸ்.ஆர்.) இது ஒரு மிரட்டல் என்று வர்ணித்தது.
“இது ஜூலை 31-ம் தேதி, மெர்டேகா சதுக்கத்தில் நடக்கவுள்ள #லாவான் ஆர்ப்பாட்டத்தில், மக்கள் கூடுவதைத் தடுக்க முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களின் ஒரு பகுதியாகும்.
“சோலிடாரிட்டி மிஷன் இயக்கத்தைச் சேர்ந்த எங்கள் நண்பரைத் தடுத்து வைக்கக்கூடாது, ஏனெனில் அவர் விசாரணைக்கு ஆஜராகி, காவல்துறையினருடன் நன்கு ஒத்துழைத்துள்ளார் […]
“அவரை உடனடியாக விடுவிக்குமாறு எஸ்.எஸ்.ஆர். காவல்துறையினரை வலியுறுத்துகிறது. இல்லையென்றால் நாங்கள் இன்னும் பெரியளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், மலேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் (மூடா) செயலாளர் ஜெனரல் அமீர் அப்துல் ஹாடி, சாரா தனது பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையைப் பயன்படுத்திக் கொண்டார் என்றார்.
“சாராவை உடனடியாக விடுவிக்க மூடா அழைப்பு விடுக்கிறது […]
“அனைத்து மலேசியர்களையும் பேசுவதற்கான உரிமையைப் தொடர்ந்து பயன்படுத்தும்படி மூடா கேட்டுக்கொள்கிறது, சாரா விடுதலையாகும் வரை, தோல்வி நிலையில் இருக்கும் இன்றைய அரசாங்கம் விலகும் வரை, அனைத்து வகையான அழுத்தங்களையும் கொடுக்க வேண்டும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உண்டி18, மகளிர் செயற்பாட்டு சங்கம் (அவாம்) மற்றும் எம்னெஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா ஆகியவையும் சாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இன்று இரவு 8 மணி நிலவரப்படி, #FreeSarah (#ஃப்ரீசாரா) என்ற 3,407 கீச்சகப் பதிவுகள் சாராவுக்கு ஆதரவாக வந்துள்ளன.
பிஎஸ்எம் இளைஞர் பிரிவினர், இன்று இரவு ஜிஞ்ஜாங் காவல் நிலையம் முன், மெழுகுவர்த்தி ஏந்தி சாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.