எம்.பி.க்கள் மக்களவையில் நுழைவதைத் தடுக்கவில்லை, ‘சட்டவிரோதக் கூட்டத்தை’ தடுத்தோம் – காவல்துறை

எம்.பி.க்கள் “அங்கீகரிக்கப்படாதக்” கூட்டத்தில் கலந்துகொண்டதையே காவல்துறை தடுத்தது, நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் செல்வதற்கு காவல்துறை எந்தத் தடையும் விதிக்கவில்லை.

இன்று, ‘சோலிடாரிட்டி பெர்சமா அன்வர் இப்ராஹிம்’ என்றப் பேரணி நடத்தப்படும் என்று அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் அஸ்மி அபு காசிம் கூறினார்.

நாடாளுமன்ற நிர்வாகத்தைத் தொடர்புகொண்டபோது, இன்று எந்த மாநாடும் நடக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.

“இதனால் காவல்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்ததோடு, வாகனங்களையும் மக்களையும் நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்காமல் திசைதிருப்பல்களைச் செய்துள்ளனர்.

“இன்று காலையில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படை காரணம் இதுதான்,” என்று அவர் இன்று, கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

எம்.பி.க்கள் கட்டிடத்திற்குள் நுழைய அனுமதி உண்டா என்று கேட்டதற்கு, அவர்கள் அவ்வாறு செய்வதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அஸ்மி கூறினார்.

ஏனென்றால், சம்மந்தப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அலுவலகங்களைக் கொண்டுள்ளனர், மேலும் அமர்வு நடைபெறாவிட்டாலும் அவர்கள் அங்குச் செல்லலாம் என்று அஸ்மி கூறினார்.

“எனக்குத் தெரிந்தவரை, அவர்களுக்கு அங்கே அலுவலகம் இருக்கிறது, அதனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

இன்று, அவசரகாலச் சட்டத்தை இரத்து செய்வது, மாமன்னரால் அங்கீகரிக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் பதில் அளிக்க வேண்டிய நாள்.

இருப்பினும், கடந்த வாரம், பிரதமர் முஹைதீன் யாசின், கோவிட் -19 அச்சுறுத்தலினால் அதை ஒத்திவைக்க முடிவு செய்தார்.

பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எம்.பிக்களின் பாதுகாப்பிற்காக, அந்த வழியில் தடை போடப்பட்டதாக ஆஸ்மி கூறினார்.

மேலும், இன்று, 500 உறுப்பினர்களும் அதிகாரிகளும் பணியில் இருந்ததாக அவர் சொன்னார்.

இதற்கிடையில், இன்றைய பேரணி குறித்து இரண்டு புகார் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும், அமைதியான ஒன்றுகூடல் சட்டம் 2012 பிரிவு 9, தண்டனைச் சட்டம் பிரிவு 269 மற்றும் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1988 ஆகியவற்றின் படி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அஸ்மி கூறினார்.

“காவல்துறை விசாரணையை நடத்தும்,” என்று அவர் கூறினார்.