மைசெஜாத்தெரா ஊக்குவித்தக் கோவிட் -19 சுயசோதனை கருவி விற்பனையை நிறுவனம் நிறுத்தியது

கோவிட் -19 சுயப் பரிசோதனை கருவியை வாங்குவதற்கான இணையவாசலாக மைசெஜாத்தெரா மூலம் சமீபத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட இ-காமர்ஸ் தளமான ஃபார்மா 2 யூ (Pharma2U) அதன் விற்பனையை நிறுத்தியது.

மலேசிய மருந்தாளுனர் சங்கம் மைசெஜ்தேராவின் மேலாதிக்க நிலையை துஷ்பிரயோகம் செய்வதாக கூறி சுகாதார அமைச்சில் புகார் அளித்த பிறகு இது நடந்தது.

ஃபார்மா 2 யூ பதிவுசெய்யப்பட்ட மருந்தாளர் அல்ல என்றும், சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி, கோவிட் -19 சுயசோதனை சாதனத்தை விற்க அங்கீகரிக்கப்படவில்லை என்றும் மருந்தாளுநர்களின் குழு கூறியது.

அப்புகாரைத் தொடர்ந்து, ஃபார்மா 2 யூ நேற்று இ-காமர்ஸ் இணையவாசலில் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

“சுயப் பரிசோதனை கருவிகள் தற்காலிகமாக விற்பனைக்குக் கிடைக்கவில்லை.

“இந்தச் சுயப் பரிசோதனை கருவிகள் விற்பனையாளர்களான, சாலிக்சியம் (Salixium), ஜிமேட் (Gmate), ஜஸ்செக் (Juschek), லோங்சீ (LongSee), ஆல் டெஸ்ட் (All Test) மற்றும் பிரைட் (Beright) ஆகியவைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து, அவை விரைவில் கிடைக்குமா என்பதை உறுதிசெய்கின்றன,” என்றார்.

முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்குத் தனது தரப்பினர் அறிவிப்பார்கள் என்று ஃபார்மா 2 யூ மேலும் கூறியது.

கோவிட் -19 சுயப் பரிசோதனை கருவியைப் பெறுவதற்கான ஓர் இணையவாசலாக மைசெஜாத்தெரா இன்னும் ஃபார்மா 2 யூ-உடன் ஓர் இணைப்பைக் கொண்டுள்ளது.

மலேசிய மருந்தாளுநர்கள் சங்கம், மக்களுக்குத் தங்கள் அருகிலுள்ள சமூக மருந்தகத்திற்குக் குறிப்பிட ஒரு வரைபடத்தைச் சேர்க்குமாறு மைசெஜாத்தெராவிடம் கேட்டுக் கொண்டது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி, மருத்துவச் சாதன ஆணையத்தால் (எம்.டி.ஏ.) அங்கீகரிக்கப்பட்ட, உரிமம் பெற்ற சமூக மருந்தக வளாகங்களில் மட்டுமே, கோவிட் -19 சுயப் பரிசோதனை வசதிகள் அல்லது மருத்துவச் சாதனங்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.