பி.என். எம்.பி.க்கள் சந்திப்பை நஸ்ரி உறுதிப்படுத்தினார்

நேற்று, பாதுகாப்பு அமைச்சிற்குச் சொந்தமான, கோலாலம்பூர் விஸ்மா பெர்விரா கட்டிடத்தில் தேசிய முன்னணி (பிஎன்) எம்.பி.க்கள் கூட்டம் நடத்தியதைப் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஜீஸ் உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும், எம்.பி.க்கள் சட்டரீதியான அறிவிப்புக்குப் (எஸ்டி) பதிலாக, “பிஎன் -ஐ பாதுகாக்கும் அறிவிப்பு கடிதத்தில்” கையெழுத்திட்டதாக அவர் கூறினார்.

“ஆமாம், நேற்றையச் சந்திப்பை நான் உறுதி செய்கிறேன். ஆனால், நாங்கள் எந்த எஸ்டி-யிலும் கையெழுத்திடவில்லை.

“உறுதிமொழி ஆணையர் முன்னிலையில் மட்டுமே எஸ்டி கையெழுத்திட முடியும்.

“நாங்கள் தேசியக் கூட்டணி அரசாங்கத்தைப் பாதுகாக்கும் ஓர் அறிவிப்பு கடிதத்தைச் செய்தோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

அச்சந்திப்பு குறித்து கருத்து கேட்டபோது அவர் அவ்வாறு கூறினார்.

முன்னதாக, துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான அக்கூட்டத்தில், பிஎன் உருப்புக் கட்சிகளின் (மசீச, ம.இ.கா. மற்றும் பிபிஆர்எஸ்) பிரதிநிதிகள் உட்பட, 26 பிஎன் எம்.பி.க்கள் கலந்துகொண்டதாக அம்னோ ஆதாரங்களை மலேசியாகினி மேற்கோள் காட்டியது.

கூட்டத்திற்கு முன்னதாக, இஸ்மாயில் 42 பிஎன் எம்.பி.க்களில் 40 பேர் முஹைதீனை ஆதரிப்பதாகக் கூறினார்.

அந்தப் பெரா எம்.பி.யின் அறிக்கைக்குப் பிறகு, பிஎன் நிர்வாகச் செயலாளர் முகமது சஹ்ஃப்ரி அப்துல் அஜீஸ் ஓர் அறிக்கையை வெளியிட்டார், அவர் இஸ்மாயிலின் அறிக்கை தவறானது என்று கண்டனம் செய்தார்.

முஹைதீனுக்கு ஆதரவளிக்காத, குவா முசாங் எம்பி தெங்கு ரஸாலே ஹம்ஸா மற்றும் பாகான் டத்தோ எம்பி அஹ்மத் ஜாஹிட் ஹமிடி ஆகிய இருவர் இல்லாத நிலையில், நாடாளுமன்றத்தில் 40 பிஎன் எம்பிக்களின் சந்திப்பை நஸ்ரி உறுதிப்படுத்தினார்.