கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி மேலவை உறுப்பினர்கள்

நேற்று, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டாட்சி சேமப்படையை (ஃப்.ஆர்.யு.) எதிர்கொண்டது போலல்லாமல், இன்று எதிர்க்கட்சி மேலவை உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைவதில் அதிகச் சிக்கலை எதிர்கொள்ளவில்லை.

ஆகஸ்ட் 3 முதல் 5 வரை நடைபெறவிருந்த சிறப்பு அமர்வு ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலவை சபாநாயகர் ராயிஸ் யாத்திமிடம் ஒரு மனுவை ஒப்படைக்க அவர்கள் அங்கு வந்தனர்.

மலேசியாகினி பார்த்த அறிக்கையின்படி, சிறப்பு அமர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

அனைத்து 16 மேலவை உறுப்பினர்களும், அவசரகாலச் சட்டத்தை மேலவையில் தாக்கல் செய்து விவாதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

“மேலவை குறுகிய கால அறிவிப்புடன் ஒத்திவைக்கப்பட்டது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.

பல மேலவை உறுப்பினர்கள், ஜூலை 30, 2021 வெள்ளிக்கிழமை முதல், கோவிட் -19 சோதனையை முடித்து, சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஆயத்தமாக கோலாலம்பூர் வந்துள்ளனர்.

“கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 150 (3)-ன் படி, பிரகடனம் மற்றும் அவசரகாலக் கட்டளைகள் மக்களவையில் மட்டுமல்லாமல், மேலவையிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது ராயிஸ்-க்குத் தெரியும்.

“இது சம்பந்தமாக, அகோங்கின் கட்டளைக்கு இணங்க, எங்கள் தயார்நிலையை நாங்கள் வெளிப்படுத்த விரும்புகிறோம்,” என்று அவர்கள் கூறினர்.

‘நாடாளுமன்றம் பாதுகாப்பானது, பெரும்பாலானவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது’

நாடாளுமன்றத்தில் நுழைந்த அவர்கள், காலை 9.45 மணியளவில், செய்தியாளர்கள் முன்னிலையில், மேலவை செயலாளர் முஹமட் சுஜைரி அப்துல்லாவிடம் மனுவை ஒப்படைத்தனர். 

செய்தியாளர்களிடம் பேசிய பி.கே.ஆர். மேலவை உறுப்பினர் யுஸ்மாடி, மேலவைக் கூட்டத்தொடர் கோவிட் -19 பரவும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற அரசின் அறிக்கையை நிராகரிப்பதாகக் கூறினார்.

நாடாளுமன்ற அமர்வை நடத்துவது பாதுகாப்பானது, ஏனெனில் கிட்டத்தட்ட 99 விழுக்காட்டினருக்குத் (செனட்டர்கள்) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

“இந்த ஒத்திவைப்பு அவர்கள் சொல்வது போல் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம் (அரசாங்கத்தால் விளக்கப்பட்டது), இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

தி வைப்ஸ் தளத்தின் செய்திபடி, காலை 10.08 மணிக்கு அவர்களை கலைந்து போகுமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.