முழு அளவு தடுப்பூசி பெற்றவர்களுக்கான தளர்வு, ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்

இரண்டு மருந்தளவுகள் கோவிட் -19 தடுப்பூசி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் நெகிழ்வுத்தன்மை மற்றும் வசதிகள், நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என்று பிரதமர் முஹிட்டின் யாசின் கூறினார்.

தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.) நெகிழ்வுத்தன்மை மற்றும் பிற வசதிகளுடன் செந்தர இயங்குதல் நடைமுறைகளைப் (எஸ்.ஓ.பி.) பரிசீலித்து, ஆய்வு செய்ததாக அவர் கூறினார்.

“நாளை அல்லது நாளை மறுநாள், இரண்டு மருந்தளவுகளைப் பெற்ற மக்கள், நீண்டகாலமாக எதிர்பார்த்துவரும் அறிவிப்பை நான் வெளியிடுவேன்.

“மாநில, மாவட்ட எல்லைகளைக் கடத்தல், பெற்றோர் அல்லது பிரிந்த தம்பதியினர் சந்திப்பு போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட வசதிகளை நாங்கள் முடிவு செய்வோம்,” என்று அவர் மூவாரில் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

இந்த அறிவிப்பில் உணவு வளாகத்தில் சாப்பிடுதல், ஓய்வு மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் போன்ற சமூகத் துறைகளுக்கான எஸ்.ஓ.பி.க்களும் அடங்கும் என்று அவர் கூறினார்.

அரசாங்கம் தளர்வை அறிவித்த போதிலும், எஸ்.ஓ.பி.-க்களுக்கு இணங்குமாறு பிரதமர் மக்களுக்கு நினைவூட்டினார்.

“நாம் வாசல் மதிப்பு அல்லது மந்தை எதிர்ப்பு சக்தியை இன்னும் எட்டவில்லை, நம் மக்களுக்கு 100 விழுக்காடு தடுப்பூசி இன்னும் போடப்படவில்லை.

“எவ்வாறாயினும், அமைக்கப்படும் எஸ்.ஓ.பி.க்களுடன் நான் அதை அறிவிப்பேன், அதனுடன் ஓய்வு, விளையாட்டுகளுக்கு கொஞ்சம் நேரம் என்றால் சற்று ஆறுதல் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இதைத்தான் எம்.கே.என். பரிசீலிக்கிறது ஆனால் அது இன்னும் அறிவிக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசு, தேசியப் பராமரிப்பு உதவிகள் மூலம் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முயற்சிகளைத் தொடர்ந்து செயல்படுத்தும் என்று முஹிட்டின் உறுதியளித்தார்.

“வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல் பலர் இன்னும் இருக்கிறார்கள். எனவே, இது எங்கள் கடமை, ஒவ்வொரு மலேசியனின் மேஜையிலும் உணவு இருப்பதை நான் உறுதி செய்ய விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா