பிரதமர் முஹிட்டின் யாசின் தனக்கான பெரும்பான்மையை மக்களவையில் தீர்மானிக்க தவறினால், அடுத்த தீர்வை மாட்சிமை தங்கிய மாமன்னர் முடிவு செய்வார் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.
நேற்றிரவு, இயங்கலையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அந்தப் பெஜூவாங் கட்சி தலைவர், பொதுத்தேர்தல் நடத்துவதன் மூலம் நாடாளுமன்றத் தேக்க நிலைக்குத் தீர்வு காண முடியும் என்றார்.
எவ்வாறாயினும், இந்த தொற்றுநோய் நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியமல்ல என்பதை அவர் ஒப்புக்கொண்டார், இதனால் முடிவு இப்போது அகோங்கின் கைகளில் உள்ளது.
“சாதாரண சூழ்நிலையில் என்றால், நாம் பொதுத் தேர்தலை நடத்துவோம்.
“இந்த அசாதாரண சூழ்நிலையில், அகோங் முன்பு என்னைத் தற்காலிகப் பிரதமராக நியமித்ததைப் போல, அகோங் தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று மகாதீர் முந்தைய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை வழிநடத்துவதில் இருந்து விலகியபோது நடந்ததைப் பற்றி கூறினார்.
பெஜுவாங் தற்போதைய சிறுபான்மை அரசாங்கத்தை ஆதரிக்கத் தயாரா என்பது குறித்து கேட்டபோது, ஆகோங் எடுக்கும் எந்தவொரு முடிவையும் கட்சி ஏற்றுக்கொள்ளும் என்று மகாதீர் கூறினார்.
முஹிட்டின் பெரும்பான்மையினரின் ஆதரவை இழந்துவிட்டதை வலியுறுத்தி, டாக்டர் மகாதீர் அடுத்த செப்டம்பரில் திட்டமிடப்பட்ட மக்களவை அமர்வுக்கு அழைப்பு விடுத்தார்.
“நாங்கள் இப்போது நம்புவது என்னவென்றால், அவருக்குப் பெரும்பான்மை இல்லை. அதனால் அவர் எப்படி பிரதமராக இருக்க முடியும்?
“எட்டு அம்னோ உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றதை நாம் அறிவோம், அதனால் அவருக்குப் பெரும்பான்மை இல்லை. உண்மையில், அவருக்குப் பெரும்பான்மை உள்ளதா என்பதை முடிவு செய்ய இப்போது ஒரு நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
முஹிட்டினுக்குப் பதிலாக, அம்னோவிலிருந்து ஒருவர் பிரதமரானால் அவருடைய நிலைப்பாடு என்னவென்று கேட்டதற்கு, “இப்போது முஹிட்டீனுக்குப் பெரும்பான்மை இல்லை என்று மட்டுமே நாங்கள் கூற விரும்புகிறோம்,” என்றார் அவர்.
“அவரது வாரிசாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்விக்கு, அது நாடாளுமன்றத்தால் முடிவு செய்ய வேண்டிய ஒரு தனி கேள்வி,” என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இதுவரை, பெஜுவாங் எம்பிக்கள் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பிற எதிர்க்கட்சிகளிடமிருந்து ஒதுங்கி, தனித்திருப்பதாக மகாதீர் இருந்தார்.
திங்களன்று, மக்களவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த, 100-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மகாதீரும் சேர்ந்துகொண்டார். கடந்த வாரம் 11 நேர்மறை கோவிட் -19 நேர்வுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சிறப்பு நாடாளுமன்ற அமர்வை அரசாங்கம் ஒத்திவைத்தது.
அடுத்த மாதம், நாடாளுமன்றம் கூடும் போது, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக முஹிட்டின் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இது தனக்கான ஆதரவைப் பெற, பிரதமர் வேறு வழிகளைப் பயன்படுத்துவார் என்ற குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது.
முஹிட்டினின் அரசியல் போட்டியாளர்கள், அம்னோ தலைவர் அஹ்மத் சாஹிட் ஹமிடி உட்பட, மக்களவையில் பிரதமருக்கு இன்னும் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்பதை அறிய, இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.