பாடாங் ரெங்காஸ் எம்பி நஸ்ரி அப்துல் அஜீஸ், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசுக்கான தங்கள் நிலைப்பாட்டை கட்சியின் அனைத்து எம்.பி.க்களும் தெரிவிக்க வேண்டும் என்று கோரி, அம்னோ தலைமை செயலாளர் அஹ்மத் மஸ்லான் அனுப்பியக் கடிதத்தை ஏற்க போவதில்லை என்று சொன்னார்.
நேற்று தொடர்பு கொண்ட போது, கட்சியின் உச்ச மன்றம் அனுப்பியதாகக் கூறப்படும் அக்கடிதத்திற்குப் பதிலளிக்கப் போவதில்லை என்று நஸ்ரி கூறினார்.
“நான் எந்தத் தவறும் செய்யாததால், அக்கடிதத்திற்கு நான் பதிலளிக்க மாட்டேன்,” என்று நஸ்ரி மலேசியாகினியிடம் கூறினார்.
இயங்கலை வலைத்தளமான சுவாரா டிவியை மேற்கோள் காட்டி, அம்னோ எம்.பி.க்கள் பிரதமருக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவது மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகுவது அல்லது தொடர்ந்து ஆதரவளித்து, பதவியில் இருப்பது குறித்து தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு அக்கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டதாக ஆஸ்ட்ரோ அவானி முன்பு செய்தி வெளியிட்டது.
நஸ்ரி அந்தக் கடிதத்தை ஒரு காரணம் கோரும் கடிதம் என்று விவரித்தார், ஏனெனில் அதில் எம்.பி.க்கள் பதிலளிக்க காலக்கெடு கொடுக்கப்பட்டது.
ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள், நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்று கூறியிருப்பதால் இது ஒரு காரணம் கோரும் கடிதம்.
“அம்னோ தலைவர் அஹ்மத் ஜாகித் ஹமிடி, 2020 அம்னோ மாநாட்டின் முடிவைத் தெளிவாக மீறியதால், அவருக்குத்தான் ஒரு காரணம் கோரும் கடிதம் கொடுக்கப்பட வேண்டும்,” என்று, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அன்வர் இப்ராஹிம் உடனான அவரின் தொலைபேசி உரையாடலைத் தொட்டு நஸ்ரி பேசினார்.
அம்னோ மாநாட்டுக்குப் பிறகு நடந்ததாகக் கூறப்பட்ட அந்த நான்கு நிமிட தொலைபேசி உரையாடலில் இருப்பது தங்கள் குரல் அல்ல என்று அஹ்மத் ஜாஹித்தும் அன்வரும் தெரிவித்தனர்.
தேசியக் கூட்டணி அரசாங்கம் மற்றும் முஹிடினை ஆதரித்ததால், வீடு மற்றும் உள்ளூராட்சி மன்றத் துணை அமைச்சரும், மாரான் எம்.பி.யுமான இஸ்மாயில் அப்துல் முத்தாலிப்புக்கு ஒரு காரணக் கோரும் கடிதத்தை நேற்று அம்னோ வழங்கியதாகக் கூறப்படுகிறது.
லெங்கோங் எம்பி ஷம்சுல் அனுவார் நசாரா, அதே நாளில் எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார், அதே நேரத்தில் அம்னோ உதவித் தலைவர் காலிட் நோர்டினும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ரஸ்லான் ரஃபியும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.