உண்மையில் பிரதமராகும் தகுதி அன்வருக்கு உண்டா? பி.எச். அதை நிரூபிப்பதற்கான நேரம் இது – கடீர்

முஹைதீன் யாசினின் பிரதமர் பதவி தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் நிலையில், பிரதமர் பதவிக்கு அன்வர் இப்ராஹிம் மிகவும் தகுதியானவர் என்பதை பக்காத்தான் ஹரப்பான் (பி.எச்.) முழுமையாக நிரூபிக்க வேண்டிய கட்டாய நேரம் இதுவாகும்.

மூத்தப் பத்திரிகையாளரும் பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகருமான கடீர் ஜாசின், முஹைதீனைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிதான் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார்.

அதே நேரத்தில், அம்னோவில், தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் விவகாரங்களில் தலையிடும் ஒரு “நீதிமன்றத் திரளை” உள்ளது.

இரண்டு சூழ்நிலைகளும், நாட்டின் அரசியல் மறுசீரமைப்பிற்கு வழி வகுக்கிறது என்றார்.

“அதே நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரதமராக இருப்பதற்கு மிகவும் தகுதியானவர் என்பதை நிரூபிக்க பி.எச். கடுமையாக உழைக்க வேண்டும்.

“நீங்கள் இன்னும் வெற்றிபெறவில்லை என்றால், மற்றவர்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள்,” என்று அவர் இன்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில் கூறினார்.

பல அம்னோ எம்.பி.க்கள் – அதன் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி உட்பட – முஹைதீன் இப்போது மக்களவையில் தனது பெரும்பான்மையை இழந்து விட்டார், அவர் பதவி விலக வேண்டும் என்பதை நிரூபிக்க போராடுகிறார்கள்.

இருப்பினும், முஹைதீன் வேறுவிதமாகக் கூறினார். அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் அவர் தலையிட வேண்டும் என்று சில தரப்பினர் விரும்புவதாக முஹைதீன் குற்றஞ்சாட்டினார்.

அன்வரை ஆதரிப்பது கட்டாயமல்ல

பதிவுக்காக, அனைத்து எம்.பி.க்களும் ஜாஹிட் பக்கம் இல்லாதச் சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கட்டுப்படுத்தி, அம்னோ அரசாங்கத்தை அமைக்க வாய்ப்பில்லை.

இது சில கட்சிகளுடன், அம்னோ ஒத்துழைக்கும் சாத்தியத்தை உருவாக்கும் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஏ கடீரின் கூற்றுப்படி, முஹைதீனும் நீதிமன்றத் திரளையின் இடையூறும் இல்லாமல் இருந்தால், வாரிசான், பெஜுவாங், மூடா மற்றும் சபா, சரவாக் கட்சிகள் போன்ற நடுநிலை வகிக்கும் கட்சிகளின் பங்கேற்பின் மூலம், தேசியக் கூட்டணி அதிக ஒத்துழைப்பு கொண்ட ஒரு கூட்டணியாக மாற வாய்ப்பு உள்ளது.

“அடுத்த மாதம், அவர் வாக்குறுதியளித்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முஹைதீன் தோற்றுப்போனால், அன்வர் தானாகவேப் பிரதமராக வருவார் என்று அர்த்தமல்ல.

“அன்வார் தனக்கு பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டும். (எம்.பி.க்கள்) முஹைதீனை ஆதரிக்கவில்லை என்றால் அவர்கள் அன்வரை ஆதரிப்பதாக அர்த்தமல்ல,” என்று அவர் கூறினார்.

கடீரின் கூற்றுப்படி, இப்போது சிறந்த வழி என்னவென்றால், 17 மாதங்களுக்கு முன்பு பி.எச்.-இடமிருந்து தேசியக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து ஏற்பட்டுள்ள அரசியல் பதட்டங்களை பி.எச். தணிக்க வேண்டும்; பொதுத் தேர்தல் நடைபெறும் வரை நாட்டின் ஆட்சி நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும்.

“அவரது 17 மாதகால ஆட்சியில், அவசரநிலை பிரகடனம் மற்றும் பெரிய செலவினங்களின் உதவியுடன் கூட, உறுதியளித்தபடி தேசியக் கூட்டணி அரசாங்கம் கோவிட் -19 தொற்றைச் சமாளிக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் தவறிவிட்டது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

“முஹைதீனுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பிற்குப் பின்னர் வரும் எந்த அரசாங்கமும், இப்போது போல் அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் சிறப்பு ஆலோசகர்களுக்காக வரி செலுத்துவோரின் பணத்தை வீணாக்க அனுமதிக்கப்படாது,” என்றும் அவர் கூறினார்.