பேரணி தொடர்பான விசாரணைக்கு எம்.பி.க்களை அழைப்பதை நிறுத்துங்கள் – சிம்

கடந்த திங்கட்கிழமை, நாடாளுமன்றத்திற்கு வெளியே பேரணியில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி எம்.பி.களிடம், விளக்க அறிக்கைகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையை நிறுத்துமாறு, பிகேஆர், பாயான் பாரு எம்.பி. சி த்ஷி த்ஷின் காவல்துறையக் கேட்டுகொண்டார்.

ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல், டாங் வாங்கி மாவட்டக் காவல் நிலையத்தில் சாட்சியம் அளிக்க 30-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களைப் போலீசார் அழைத்ததை அடுத்து அவர் இவ்வாறு கூறினார்.

“என்னால் கணக்கிட முடியவில்லை, சுமார் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

“இது வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையாகும். மலேசிய வரலாற்றில், ஒரு பேரணி தொடர்பான விசாரணைக்கு (உதவ) அழைக்கப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை இதுபோல் அதிகமாக இதுவரை இருந்ததில்லை.

“நஜிப் ரசாக் பிரதமராக இருந்த காலத்தில் கூட, ஒரு பேரணிக்காக ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அழைக்கப்பட்டனர்.

“இப்போது, ​​ஒரு பேரணிக்காக 30 பேர் அழைக்கப்படுகின்றனர், முஹைதீன் யாசின் சாதனை படைக்க முயற்சிக்கிறாரா?” என்று சிம் கேள்வி எழுப்பினார்.

ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக, முஹைதீனும் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“அவர் (முஹைதீன்) ஒருமுறை, ‘எம்.பிக்களின் உரிமைகளை மதிக்கவும்’ என்று எழுதப்பட்ட ஒரு பதாகையை எடுத்துச் சென்றது எனக்கு நினைவிருக்கிறது. எனவே, எம்.பி.க்கள் என்ற முறையில், எங்கள் உரிமைகளை மதிக்கும்படி நாங்கள் அவரிடம் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

காவல்துறை விசாரணைகளில் ஈடுபடுவதை விட, அவர்களின் தொகுதிகளில் உள்ள  வாக்காளர்களுக்கே எம்.பி.க்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 2-ஆம் தேதி, டிஏபி, பிகேஆர், அமானா, மூடா, பெஜுவாங், வாரிசான், சரவாக் பெர்சத்து கட்சி மற்றும் அப்கோ ஆகிய அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கூடி நாடாளுமன்றத்திற்குச் செல்ல முயன்றனர்.

அவர்கள் முஹிதீனை இராஜினாமா செய்ய வலியுறுத்தினர்.