முஹைதீனை நிராகரித்து, இஸ்தானாவுக்கு எதிர்கட்சியினர் கடிதம் 

முஹைதீன் யாசினுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற கட்சியின் எம்.பி.க்கள் அடங்கிய 13 கடிதங்களை அம்னோ வெளிப்படுத்திய பிறகு, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமரை நிராகரிக்கும் கடிதம் ஒன்றை மாட்சிமை தங்கியப் பேரரசருக்கு அனுப்பியுள்ளதாக நம்பத்தகுந்த எதிர்க்கட்சி வட்டாரம் தெரிவித்தது.

அமானா மற்றும் பெஜுவாங்-ஐ சேர்ந்த இரண்டு ஆதாரங்கள், இந்தக் கடிதம் இன்று அரண்மனைக்கு அனுப்பப்பட்டதை உறுதிப்படுத்தின.

“இன்று மாலை 4 மணியளவில் நாங்கள் ஒரு கடிதத்தை அனுப்பினோம்.

“பெஜுவாங், டிஏபி, பிகேஆர், வாரிசான், சரவாக் பெர்சத்து கட்சி, மூடா, அமானா மற்றும் மஸ்லீ மாலிக் (சுயேட்சை) ஆகிய அனைத்து, 105 எம்.பி.க்களும் கடிதங்களை அனுப்பினர்.

“முஹைதீனை நிராகரிக்கும் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த முடிவால், ஆதரவைத் திரும்பப் பெற்ற எம்.பி.க்களின் எண்ணிக்கை இப்போது 118-ஐ எட்டியுள்ளது,” என்று அந்த ஆதாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.

தகவலை உறுதிப்படுத்த, மலேசியாகினி பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றத்தைத் தொடர்பு கொண்டுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு ஆதாரத்தின்படி, எதிர்க்கட்சிகள் ஒரு தொகுதியாக (என்-புளோக்) கடிதத்தைச் சமர்ப்பித்தன.

“கட்சித் தலைவர் அந்தந்தக் கட்சிகளின் சார்பாக தனது கடிதத்தை அனுப்பினார்.

“ஜூலை 29-ஆம் தேதி, அம்னோ கடிதத்தை ஒப்படைத்ததைப் பார்த்தால், ஜூலை 30-ஆம் தேதி எட்டு அம்னோ எம்.பி.க்கள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றனர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 105 பேர் சேர்த்தால், மொத்தம் 113 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

“எனவே, மக்களவையில் அவருக்கு இன்னும் அதிகாரம் இருப்பதாக, முஹைதீன் மன்னரை ஏமாற்றியுள்ளார் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்தச் செய்தியை எழுதும் போது, 15 அம்னோ எம்.பி.க்கள், தேசியக் கூட்டணி மற்றும் முஹைதீன் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்வழி, மக்களவையில் முஹைதீனின் ஆதரவு இப்போது 100 உறுப்பினர்களாகக் குறைந்துள்ளது, இது நாடாளுமன்றத்தில் எளியப் பெரும்பான்மை பெற 11-க்கும் குறைவாக உள்ளது.

இருப்பினும், பாகோ எம்.பி.யான முஹைதீன், ஆகஸ்ட் 4-ஆம் தேதி, மன்னரை எதிர்கொண்டு, நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உள்ளது என்று வலியுறுத்தினார்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், நம்பிக்கை வாக்கெடுப்பு பிரேரணை கொண்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.