எம்.எம்.ஏ. : முழு அளவு தடுப்பூசி பெற்றவர்களுக்கான நெகிழ்வுத்தன்மையை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும்

இன்று முதல் நடைமுறைக்கு வரும், முழு அளவிலான தடுப்பூசி போடப்பட்ட தனிநபர்களுக்கான தளர்வை, அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று மலேசிய மருத்துவச் சங்கம் (எம்எம்ஏ) விரும்புகிறது.

எம்எம்ஏ தலைவர் டாக்டர் சுப்ரமணியம் முனியாண்டி, கோவிட் -19 நேர்வுகள் கணிசமாகக் குறைக்கப்படும்போது மட்டுமே, இத்தகையத் தளர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

நீண்ட தூரத்தில் வசிக்கும் தம்பதிகள் சந்திக்க, மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய அனுமதிப்பது போன்ற சில சலுகைகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

மருத்துவமனையில் படுக்கைகள் பயன்பாடு நிலை மற்றும் தீவிரச் சிகிச்சை பிரிவின் (ஐசியு) நிலை ஆகியவை மிக முக்கியமான குறிகாட்டிகள் என்று சுப்ரமணியம் கூறினார்.

முன்னோக்கிப் பார்க்கும்போது, ​​ஒவ்வொரு மாநிலத்திலும் படுக்கைகள் மற்றும் ஐசியு பயன்பாட்டின் நேர்மறை விகிதங்கள் மற்றும் நிலை குறித்த புதுப்பிப்புகளை அரசாங்கம் வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம், ஏனெனில் இது ஒவ்வொரு நாளும் புதிய நேர்வுகளை அறிவிப்பது தவிர, மிகவும் அர்த்தமுள்ள அடையாளமாக இருக்கும்.

“படுக்கை பயன்பாட்டுத் திறன் மற்றும் அந்தந்த மாநிலங்களில் உள்ள ஐசியு நிலை குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம்,” என்று அவர் மேலும் கூறினார்.

தடுப்பூசி விகிதங்கள் அதிகரிப்பதால், மாத இறுதிக்குள் தீவிர நேர்வுகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்பதை சுப்பிரமணியம் ஒப்புக்கொண்டார்.

கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் போது, அதிக ஆபத்துள்ள குழுக்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

“தடையை நீக்கும் போது, முதியோர் இல்லங்கள், தொழிற்சாலை மற்றும் கட்டுமானத் தளத் தொழிலாளர்கள், பாதுகாவலர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மருத்துவத் துறை மாணவர்கள் மற்றும் தடுப்பூசி போடப்படாத ஆவணமற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போன்ற உயர்-ஆபத்து கொண்ட குழுக்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இன்று முதல், முழு அளவிலான தடுப்பூசி பெற்றவர்கள் மசூதிகள் மற்றும் சூராவ்களில் பிரார்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதிக்கிறது.

முழு அளவிலான தடுப்பூசி பெற்ற பெற்றோர்கள், 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை சந்திக்க மாநிலம் முழுவதும் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதுமட்டுமின்றி, வெளிநாட்டிலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் நாட்டிற்கு வந்தவுடன், வீட்டிலேயேத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படலாம்.

தேசிய மீட்புநிலைத் திட்டத்தின் 2-ஆம் அல்லது அதற்கு மேற்பட்ட கட்டத்தின் கீழ் உள்ள மாநிலங்களில், உணவகங்களில் உணவருந்தவும் மாவட்ட எல்லைகளைக் கடந்து பயணம் செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.