இராமசாமி : கெடா எம்.பி.யை விமர்சித்த மூத்தக் குடியை உடனே கைது செய்தது ஏன்?

கெடா மந்திரி பெசார் முஹமது சனுசி முகமது நோரை விமர்சித்து, வீடியோ பதிவு ஒன்றைப் பரப்பியதற்காக, 61 வயது மூத்த குடிமகன் ஒருவரை அதிரடியாகக் கைது செய்ததன் காரணம் குறித்து பினாங்கு துணை முதல்வர் பி இராமசாமி கேள்வி எழுப்பினார்.

அந்த வீடியோ பதிவில், பிணக் கொள்கலன் குறித்த சனுசியின் “மோசமான நகைச்சுவை” குறித்து அந்த மூத்த குடிமகன் விமர்சித்தார்.

சனுசியை விமர்சித்ததற்காக, அவரைப் போலீசார் உடனடியாகக் கைது செய்து, தடுத்து வைத்து, பின்னர் ஒருவர் ஜாமீனில் விடுவித்த விதம் போலீசாரின் சொந்த நடத்தைப் பற்றியக் கேள்விகளையும் எழுப்புகிறது.

சில நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்ட அந்த வீடியோவின், சனுசியை முட்டாள் என்று விமர்சித்ததற்காக, நெகிரி செம்பிலான், லெங்கேங்கைச் சேர்ந்த 61 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

கோவிட் -19 காரணமாக இறந்தவர்களுக்குப் போதுமான இடங்கள் உள்ளதா என்று, ஒரு நிருபர் சில நாட்களுக்கு முன்பு சனுசியிடம் கேட்டபோது, ​​அதற்குப் போதுமான கொள்கலன்கள் இருப்பதாகவும், உள்ளே நுழைய விரும்புவோர் அவர்களின் பெயரைக் கொடுக்கலாம் என்றும் சனுசி கூறியுள்ளார்.

“சனுசியின் சிறப்பு அதிகாரி அளித்த புகார் அறிக்கையின் அடிப்படையில், அந்த மூத்த குடிமகனின் வீடியோ கிளிப்பைக் கண்காணித்த போலீசார், அவரைக் கைது செய்து கெடாவுக்கு அழைத்துச் சென்றனர்.

“மற்ற அவசர விஷயங்களில், காவல்துறையினர் தங்கள் வேலையை இவ்வளவு திறமையாகச் செய்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை,” என்று இராமசாமி கூறினார்.

தனது “மோசமான நகைச்சுவைக்கு” சனுசி மன்னிப்பு கேட்டிருந்தாலும், பல சமூக ஊடகப் பயனர்கள் சனுசியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, கோவிட் -19 பெருந்தொற்றின் விளைவாக பல மலேசியர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ள சமயத்தில் சனுசியின் ‘நகைச்சுவை’ அருவருக்கத்தக்கது என்று அவர் கூறினார்.

“சனுசியின் அந்த மோசமான பேச்சை, நூற்றுக்கணக்கான மக்கள் விமர்சித்திருந்தாலும், அதிகாரிகள் ஏன் குறிப்பாக இந்த மூத்த குடிமகன் மீது கவனம் செலுத்துகிறார்கள்.

“பிரதமர் முஹைதீன் யாசினையே பலர் பல்வேறு பட்டப் பெயர்களால் அழைக்கும்போது, இவரின் வீடியோ ஏன் காவல்துறையால் மிகவும் உணர்திறன் வாய்ந்ததாகக் கருதப்பட்டது?” என்றும் இராமசாமி கேள்வி எழுப்பினார்.

நேற்று, கோல மூடா மாவட்டக் காவல்துறைத் தலைவர், அட்ஸ்லி அபு ஷா, அந்த மூத்தக் குடிமகனைக் கண்டுபிடித்து, அவரது வீட்டில் சோதனை நடத்தியதாகக் கூறினார்.

“அந்நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 504, சிறு குற்றங்கள் சட்டம் 1955 பிரிவு 14 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 பிரிவு 233-ன் கீழ், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அட்ஸ்லி கூறினார்.

பல தீவிர வழக்குகள் குறித்து புகார் அளித்த போதிலும், அதில் கவனம் செலுத்தாத காவல்துறை, சனுசி தொடர்பான வீடியோ பதிவில் ஏன் இத்தகைய கவனத்தைச் செலுத்துகிறது என்பதை விளக்குமாறு இராமசாமி காவல்துறையைக் கேட்டுக்கொண்டார்.