எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், மக்களவை சபாநாயகர் அஸார் அஸிசான் ஹாரூனை, “பதவி வகிக்க தகுதியற்றவர்” என்று விமர்சித்ததற்கு, எரிசக்தி மற்றும் இயற்கை வளத் துறை துணை அமைச்சர் அலி பிஜு முரண்படுவதாகக் கூறினார்.
பல அம்னோ எம்.பி.க்கள், பிரதமர் முஹைதீன் யாசினுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, முஹைதீன் பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அறிவிக்க அஸார் தவறிவிட்டார் என்று அன்வர் கூறினார்.
அவருக்குப் (பிரதமர்) பெரும்பான்மை இருக்கிறதா என்று பிரதமரிடம் சொல்ல, கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்று அலி கூறினார்.
“கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 43 (4)-இன் அடிப்படையில், மக்களவையில் பெரும்பான்மை உள்ளதா என்பதை இறுதியாகப் பிரதமரே தீர்மானிக்கிறார்.
“அவருக்குப் பெரும்பான்மை இருக்கிறதா என்று சபாநாயகர் பிரதமருக்கு முறையாகத் தெரிவித்தால், சபாநாயகர் தனது அதிகார வரம்பு மற்றும் அதிகாரத்திற்கு வெளியே செயல்படுகிறார் என அர்த்தம்,” என்று அலி ஓர் அறிக்கையில் கூறினார்.
நேற்று, பெரும்பான்மையை இழந்த அரசாங்கத்தின் பலவீனங்களை மறைக்க அஸார் முயற்சிக்கிறாரா என்று அன்வார் கேள்வி எழுப்பியதாக தி வைப்ஸ் மேற்கோளிட்டது.
கடந்த ஆண்டு தேசியக் கூட்டணியில் சேருவதற்கு முன்பு, பிகேஆர் துணைத் தலைவராக இருந்த அலி, அன்வர் வேண்டுமென்றே அரசியலமைப்பைத் திருப்பிவிடுகிறாரா என்று கேள்வி எழுப்பினார்.
“பல தசாப்தங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த உண்மையை முற்றிலும் அறியாதவராக இருப்பது வெட்கக்கேடானது, அவர் சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற நிறுவனம் மீது, பொதுமக்கள் வெறுப்படைந்து கடுமையான தாக்குதலைத் தொடங்க வேண்டுமென்றே இவ்வாறு தவறாக வழிநடத்துகிறார்.
சபாநாயகர் மீதான அன்வரின் தாக்குதல், “உண்மையில் தீங்கிழைக்கும்” செயல் என்று விவரித்த அலி, எதிர்க்கட்சித் தலைவர் பிரதமராக விரும்புவதையும் விமர்சித்தார்.
செப்டம்பர் 7-ஆம் தேதி, நம்பிக்கை தீர்மானத்தை மக்களவைக்குக் கொண்டுவர பிரதமர் ஒப்புக்கொண்டதையும், அந்த சாரதோக் எம்.பி. அன்வருக்கு நினைவூட்டினார்.