‘சட்டசபையைக் கலைத்துவிடுவேன்’ – ஜொகூர் சுல்தான் எச்சரிக்கை

ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் அல்மர்ஹும் சுல்தான் இஸ்கண்டார், தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்க சில தரப்பினர் முயற்சி செய்கிறார்கள் என்றால், ஜொகூர் மாநிலச் சட்டசபையைக் கலைக்க தயங்க மாட்டேன் என்று இன்று கூறினார்.

“ஒவ்வொருவரும், மக்கள் நலன்களைப் பற்றி சிந்தியாமல், தங்கள் சொந்த நிலைப்பாட்டை மட்டுமே நினைத்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் தேவை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

“கோவிட் -19 தொற்றுநோய் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன், புதிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நான் மக்களிடம் விட்டுவிடுவேன். அதன் பிறகாவது, மக்களுக்குச் சேவை செய்ய விரும்பும், நேர்மையான மற்றும் சரியான தலைவரைத் தேர்ந்தெடுங்கள்,” என்று அவர் கூறினார்.

இன்று, ஜொகூர் பாரு, இஸ்கண்டார் புத்ரி, கோத்தா இஸ்கந்தார், சுல்தான் இஸ்மாயில் கட்டிடத்தில், பதினான்காம் ஜொகூர் மாநிலச் சட்டசபையின், நான்காவது அமர்வின் தொடக்க விழாவில் அவர் இதனை கூறினார்.

ஜொகூர் அரசியலமைப்பின் பிரிவு 23(2), சட்டசபையைக் கலைக்க சுல்தானுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறுகிறது.

இருப்பினும், மாநில அரசியலமைப்பின் பிரிவு 7(1), சுல்தான் தனது செயல்பாடுகளை நிறைவேற்றுவதில், மாநில அரசின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும் என்று கூறுகிறது.

பிரிவு 7 (2)(b) சட்டசபையைக் கலைக்கும் வேண்டுகோளுக்கு, அனுமதி வழங்காமல் இருக்க சுல்தானுக்கு விருப்ப அதிகாரம் உள்ளது என்று கூறுகிறது.

இருப்பினும், சுல்தான் இப்ராஹிம் உத்தரவுப்படி, தேர்தலை ஒத்திவைக்க மாநிலத்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட வேண்டும், இல்லையெனில், ஜொகூர் மாநிலச் சட்டசபை கலைக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஜொகூர் மாநில மந்திரி பெசாரும் கம்பீர் சட்டமன்ற உறுப்பினரும் (பிரதமர்)

சுல்தானுக்கு அவசரகால நிலையை அறிவிக்க அதிகாரம் இல்லை, மத்திய அரசின் ஆலோசனையின் பேரில், கூட்டாட்சி அரசியலமைப்பின் 150-வது பிரிவின்படி, மாட்சிமை தங்கிய மாமன்னரால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

‘என் சட்டசபை குரங்கு கூண்டு அல்ல’

இதற்கிடையில், இம்முறை மாநாட்டு அமர்வைப் பயன்படுத்தி, மக்களுக்கு உதவவும் ஜொகூர் மாநிலப் பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்கவும், ஒரு செயல் திட்டத்தை விவாதித்து தொகுக்க, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.

“சபை உறுப்பினர்கள் பொருத்தமற்ற பிரேரணைகளை விவாதிக்கவோ அல்லது கொண்டு வரவோ தேவையில்லை. சுயநலவாதிகளாக நீங்கள் இருக்காதீர்கள். கோவிட் -19 தொற்றுநோயால் இங்குள்ள மக்கள் போராடுகின்றனர், சிலர் பட்டினியில் உள்ளனர், சிலர் வேலை இழந்துள்ளனர் மற்றும் சிலர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

“இது வாதிடுவதற்கான நேரம் அல்ல, மாறாக அனைவரும் ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டிய நேரம். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்களிடம் கேட்காதீர்கள், கண்ணாடியில் உங்கள் சொந்த முகத்தைப் பாருங்கள்,” என்றார்.

மாநிலச் சட்டசபை என்பது, மக்கள் மற்றும் ஜொகூர் மாநிலத்தின் நலன் கருதி விவாதிக்கும் முடிவுகள் எடுக்கும் ஓர் இடம் என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

“மோசமான நடத்தையால் எனது சபையை மாசுபடுத்தாதீர்கள். இது ஓர் உன்னத சபை, குரங்கு கூண்டு அல்ல.

“எனது செய்தியை நினைவில் கொள்ளுங்கள், சபாநாயகர் அவர்களே. ஒரு நல்ல வேலையைச் செய்யுங்கள், எனது மாநிலத்தையும் அரசாங்கத்தையும் தொந்தரவு செய்யும் அளவுக்குச் சண்டையிடும் எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் அரசியல் விளையாட்டையும் நான் அனுமதிக்க மாட்டேன் என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

தேசிய மறுவாழ்வு திட்டக் (பிபிஎன்) கால கட்டத்தில், மாநிலச் சட்டசபைக் கூட்டத்தை நடத்திய முதல் மாநிலம் ஜொகூர் ஆகும்.