தூய்மையான மற்றும் நேர்மையான தேர்தலுக்கான கூட்டமைப்பு (பெர்சே 2.0) 15-வது பொதுத் தேர்தலுக்கு (ஜிஇ15) முன்னதாக, தேர்தல் எல்லைகளை மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
மத்திய அரசு மறுத்தால், சீர்திருத்த சிந்தனை கொண்ட மாநில அரசு, சீர்திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என்று அது கூறியது.
இன்று பினாங்கில், நியாயமான பிரதிநிதித்துவத்தின் சாத்தியக்கூறுகள் குறித்த அறிக்கையைத் தொடக்கி வைத்த பின்னர், பெர்சே இந்த அழைப்பை விடுத்தது.
பினாங்கு மாநிலச் சட்டசபை எல்லை நிர்ணயப் பிரச்சனைகளையும், முறைகேடுகள் (malapportionment) மற்றும் ஜெர்ரிமாண்டரிங் (gerrymandering) (அரசியல் நோக்கங்களுக்காக, சில தரப்பினருக்கு நன்மை அளிக்கும் வகையில் தொகுதி எல்லைகளைப் பிரிப்பது) செயல்படுத்துவதன் விளைவால் ஏற்படும் பிரச்சனையைக் குறைக்க எல்லை நிர்ணய உருவகப்படுத்தல் வழி இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதேபோன்ற ஆய்வு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானிலும் நடத்தப்பட்டது, ஆனால் கண்டுபிடிப்புகள் அறிவிக்கப்படவில்லை.
இன்று ஓர் அறிக்கையில், வாக்களிக்கும் வயது 18 (வாக்கு18) மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவு (ஏவிஆர்) அமல்படுத்தப்படும் போது, சமத்துவமின்மை பிரச்சனைகள் மிகவும் தீவிரமாக இருக்கும் என்று பெர்சே கூறியது.
பெரும்பாலான இளைஞர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர் என்றது அது.
“தற்போது, நகர்ப்புறங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை ஏற்கனவே கிராமப்புறங்களை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
“வாக்கு18 மற்றும் ஏவிஆர் நடைமுறைக்கு வந்த பிறகு, இந்த இடைவெளி ஆறு முதல் எட்டு மடங்காக உயரலாம்,” என்று பெர்சே கூறியது.