முஹைதீனுக்கான ஆதரவின் எண்ணிக்கை அறிய விரும்பம் – இஸ்தானா கடிதம் அனுப்பியது

முஹைதீன் யாசினுக்கு மக்களவை உறுப்பினர்களின் மொத்த ஆதரவு குறித்து, மக்களவை சபாநாயகரின் உறுதிப்பாட்டை பெற இஸ்தானா நெகாரா கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

பரவலாகி வரும் அக்கடிதத்தின் அடிப்படையில், டத்தோ பெங்கலோல பிஜாயா இஸ்தானா நெகாரா கையெழுத்திட்ட அக்கடிதம், சபாநாயகர் அஸார் ஹருனுக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தை அறிந்த சில ஆதாரங்கள், மலேசியாகினிக்குக் கடிதத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தின.

யாங் டி-பெர்த்துவான் அகோங் பிரதமருக்கான ஆதரவின் எண்ணிக்கை அறிய விரும்புவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3-ம் தேதியிட்ட ஒரு கடிதத்தில், முஹைதீனுக்கு 106 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக அஸார் தெரிவித்ததாக இஸ்தானா கூறியது.

இருப்பினும், அரண்மனையின் கூற்றுபடி, ஆகஸ்ட் 4 மற்றும் 6-ம் தேதிகளில், இரண்டு அமைச்சரவை உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததை தொடர்ந்து, மொத்த ஆதரவு எண்ணிக்கையில் இரண்டு குறைந்துள்ளது.

இதற்கிடையில், மக்களவை துணை சபாநாயகர் முகமட் ரஷித் ஹஸ்னான், அஸார் அரண்மனையிலிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றாரா இல்லையா என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை, ஏனெனில் அத்தகையக் கடிதம், நீண்டகாலமாக நிறுவப்பட்டுவரும் முன்னுதாரணத்திற்கு எதிரானது என்றார்.

“அதனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அறிக்கைகளைப் பற்றி நான் கேட்க வேண்டும், ஏனென்றால் அகோங் தனது கேள்வியைச் சபாநாயகரிடம் எப்படி கேட்க முடியும்.

“நடைமுறையின் படி, நாடாளுமன்ற அமர்வின் போது, ​​அவையில் என்ன நடந்தாலும், மக்களவையின் தலைவர் (பிரதமர்), அவரது பெரும்பான்மை ஆதரவு உட்பட, தனிப்பட்ட முறையில் அகோங்கிற்கு அறிக்கை அளிப்பார்.

“இது சபாநாயகரிடம் இருந்து வராது. அது முடியாது. இதுதான் நடைமுறை,” என்று அவர் சொன்னதாக, தி வைப்ஸ் மேற்கோள் காட்டியது.

ஆகஸ்ட் 9-ஆம் தேதி, அம்னோ முஹைதீனை ஆதரிக்கவில்லை என்று கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டக் கடிதத்தை வெளியிட்டது.

அம்னோ இளைஞர் போலீசில் புகார் செய்தார்

அது தவிர, அது அஸாரின் பதில் கடிதம் என்று ஒரு கடிதம் பரவியது. எனினும், அது உறுதி செய்யப்படவில்லை.

மலேசியாகினி அஸாரைத் தொடர்பு கொண்டு இன்னும் விளக்கத்திற்காகக் காத்திருக்கிறது.

இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க அஸார் மறுத்துள்ளதாக மலேசியபோஸ்ட் செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

“மன்னிக்கவும், எனது அதிகாரப்பூர்வத் தகவல்தொடர்பு, குறிப்பாக அரண்மனை சார்ந்தவைக் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது,” என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, அம்னோ இளைஞர் பிரிவு காவல்துறையில் புகார் அறிக்கையை தாக்கல் செய்து, அதிகாரிகளை விசாரித்து கடிதம் உண்மையானதா இல்லையா என்பதைத் தீர்மானிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

அதன் தலைவர், அஸிரத் வஜ்டி டுசுக்கி செய்தியாளர் சந்திப்பில், சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட அக்கடிதம் போலியானது எனில், அஸார் மறுப்பு தெரிவிக்க வேண்டும்.

“இஸ்தானா நெகாரா சம்பந்தப்பட்டதால், கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று மலேசியாபோஸ்ட் குறிப்பிட்டிருந்தாலும், அனுப்பப்பட்டக் கடிதத்தை மக்களவை சபாநாயகர் உடனடியாக மறுக்குமாறு அம்னோ இளைஞர் பிரிவு கேட்டுக்கொள்கிறது,” என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மலேசியாகினி இஸ்தானா நெகாராவுக்குக் கோரிக்கை அனுப்பியுள்ளது.