தேசியக் கூட்டணி (பிஎன்) கட்சிகளின் முக்கியத் தலைவர்களுடனான சந்திப்பு, ஒரு சாதாரண சந்திப்பு என்று பிரதமர் முஹைதீன் யாசின் கூறினார்.
“இது ஒரு சாதாரண சந்திப்பு. நான் அவர்களை நீண்ட காலமாகப் பார்க்கவில்லை, சிறிது ஏக்கமாக இருந்தது, அதனால்தான்…,” என்று அவர் நேற்று, கோல திரெங்கானுவில் செய்தியாளர்களிடம் கேலியாகப் பதிலளித்தார்.
நேற்று முந்தினம், முஹைதீன், புத்ராஜெயா, பெர்டானா புத்ராவில், பிஎன் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் இரண்டு மணி நேரச் சந்திப்பை நடத்தினார்.
சரவாக் கூட்டணி கட்சி (ஜிபிஎஸ்) தலைவரும், சரவாக் முதலமைச்சருமான அபாங் ஜோஹரி ஓபேங் மற்றும் மசீச தலைவரும் போக்குவரத்து அமைச்சருமான டாக்டர் வீ கா சியோங் ஆகியோரும் அச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
நேற்று பிற்பகல், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உடனான சந்திப்பு பற்றி கேட்டபோது, முஹைதீன் அந்த மாராங் எம்.பி.யைப் பார்க்க விரும்பியதாகக் கூறினார்.
“தோக் குரு ஹாஜி ஹாடி ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால், மந்திரி பெசார் (அஹ்மத் சம்சூரி மொக்தார்) முன்னதாகச் சந்தித்ததாகவும், (அப்துல் ஹாடி) உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் என்னிடம் கூறினார்.
“நான் அவரை நீண்ட காலமாகப் பார்க்காததால், மருத்துவமனையில் இருந்தவரை நான் (அப்துல் ஹாடியை) சந்தித்தேன்… கட்சி மற்றும் நாட்டிற்காக அவர் தனது கடமைகளைச் செய்ய அவர் நலமடைவார் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
கடந்த ஜூன் மாதம், அப்துல் ஹாடி உடல்நலக்குறைவு காரணமாக, கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று பிற்பகல், மராங்கில் உள்ள அப்துல் ஹாடியின் இல்லத்தில் நடந்த சந்திப்பில், இரு தலைவர்களும் சுமார் ஒரு மணிநேரத்தைச் செலவிட்டுள்ளனர், ஆனால் சந்திப்பின் விவரங்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
- பெர்னாமா