வழக்கறிஞர்கள் : பெரும்பான்மை இல்லாமல் முஹைதீன் பிரதமராக இருக்க முடியாது

பெரும்பான்மை ஆதரவை இழந்ததை ஒப்புக்கொண்ட பிறகு, முஹைதீன் யாசின் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருப்பதற்கு வழியில்லை என்று வழக்கறிஞர் ஹனிஃப் கத்ரி அப்துல்லா கூறினார்.

கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 43 (4), பெரும்பான்மை ஆதரவு இல்லாதப் பிரதமருக்கு இரண்டு தேர்வுகளை மட்டுமே வழங்குகிறது – அதாவது தேர்தல்களை நடத்த அல்லது அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களுடன் பதவி விலக என்றார் அவர்.

வழக்கறிஞர் ஹனிஃப் கத்ரி அப்துல்லா

புதியப் பிரதமராக நியமிக்கப்படுவதற்குப் பெரும்பான்மை ஆதரவை, வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் நிரூபிக்க முடியாது என்ற அடிப்படையில், முஹைதீன் பதவியில் தொடர்ந்து இருக்க முடியாது என்று ஹனிஃப் கூறினார்.

“இது யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் விருப்பத்திற்கு உட்பட்டது.

“நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி கேட்கலாமா அல்லது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டால் இராஜினாமா செய்யலாமா என்பதைப் பிரதமர் முடிவு செய்ய வேண்டும்,” என்று ஹனிஃப் மலேசியாகினி தொடர்பு கொண்டபோது கூறினார்.

நேற்று முஹைதீன் இரண்டு வழிகள் இருப்பதாக கூறினார், மாமன்னரின் ஒப்புதலைப் பெற்று நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தவது அல்லது பதவியில் இருந்து விலகுவது.

எவ்வாறாயினும், எம்.பி.க்களில் யாரும் பிரதமராக நியமிக்கப்பட பெரும்பான்மையைப் பெறவில்லை என்று முஹைதீன் கூறினார். இது சம்பந்தமாக, அடுத்த மாதம் மக்களவையில் அவருக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய, பிஎன்-க்கு வெளியே உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் சொன்னர்.

மேலும் கருத்து தெரிவித்த ஹனிஃப், அகோங்கிற்குத் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கும், முஹைதீனுக்குப் பதிலாக சரியான பிரதமர் யார் என்பதை முடிவெடுப்பதற்கும் முழு அதிகாரம் இருப்பதாக வலியுறுத்தினார்.

“இது முற்றிலும் அகோங்கைப் பொறுத்தது. செயல்முறை எவ்வாறு செல்கிறது என்பதை அவர்தான் தீர்மானிப்பார்,” என்று ஹனிஃப் கூறினார்.

வழக்கறிஞர் நியூ சின் இயூ

அதேபோல், வழக்கறிஞர் நியூ சின் இயூ, கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 43 (4), பிரதமர் இராஜினாமா செய்வதற்கான எந்த நிபந்தனைகளையும் கூறவில்லை என்றார்.

“பிரிவு 43 (4) பெரும்பான்மை நம்பிக்கை இழப்பைத் தவிர, பிரதமர் இராஜினாமா செய்வதற்கான எந்த நிபந்தனைகளையும் கூறவில்லை.

“தற்போதைக்குச் செய்ய வேண்டிய சரியான விஷயம், பிரதமர் பதவி விலக வேண்டும், அதன்பின் ஒரு புதியப் பிரதமரை நியமிப்பதற்கான செயல்முறை நடக்க வேண்டும்,” என்று நியூ மலேசியாகினியிடம் கூறினார்.

“இராஜினாமா செய்வதற்கு முன்பு பெரும்பான்மை ஆதரவு கொண்ட மற்ற எம்.பி.க்கள் இருக்க வேண்டும் என்று கூறி, முஹைதீன் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார்,” என்று நியூ மேலும் கூறினார்.

‘ஐடியாஸ்’ தலைமை நிர்வாக அதிகாரி ட்ரிசியா இயோ

இதற்கிடையில், ஜனநாயகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான (ஐடியாஸ்) தலைமை நிர்வாக அதிகாரி ட்ரிசியா இயோ, முஹைதீன் நம்பிக்கை பிரேரணையைக் கேட்டபோதே பெரும்பான்மையை இழந்துவிட்டதை ஒப்புக் கொண்டுவிட்டார்.

“(அவர் கூறினார்) என்னை ஆதரியுங்கள், இவையெல்லாம் உங்களுக்கும் கிடைக்கும். மக்கள் நிறைய சீர்திருத்தங்களைக் கோரினர்.

“ஆதரவைப் பெறுவதற்காக பல இனிப்புகள் வழங்கப்படுகிறது. அவருக்குப் பெரும்பான்மை இல்லை என்பதற்கு இதுவே சான்று,” என்று இயோ கூறினார்.

எம்.பி.க்கள் யாருக்கும் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்ற முஹைதீனின் அறிக்கை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

“நீங்கள் நாடாளுமன்றத்தில் அமர்ந்து, தகுதியான வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பது மட்டுமே இதற்கு ஒரே வழி.

“இது அடிப்படையில் ஒரு வகுப்புத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது போன்றது,” என்று அவர் கூறினார்.

முஹைதீன் மீதான மக்களவையின் நம்பிக்கையைச் சோதிக்கும் வாக்குப்பதிவு செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.