முஹைதீன் மீது போலீஸ் புகார், எம்ஏசிசி விசாரணைக்குக் கோரிக்கை

நேற்று, பிரதமர் முஹைதீன் யாசின் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அளித்த சலுகைகள், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்புடையவை எனக்கூறி, பிரதமரை விசாரிக்க வேண்டுமென அமானா போலீசில் புகார் செய்தது.

அமானாவால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில், இன்று காலை 11 மணி முதல், பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அறிக்கைகள் சமர்ப்பிக்கத் தொடங்கியுள்ளன.

அமானா அணிதிரட்டல் பிரிவின் தலைவர் முகமட் சானி ஹம்சான் இதை அறிவித்தார்.

இதற்கிடையில், பி.கே.ஆர் இளைஞர் பிரிவு தலைவர் அக்மால் நசீர் மற்றும் அப்பிரிவின் சட்டப் பிரிவுத் தலைவரான சீயூ சூன் மான் ஆகியோர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றனர்.

நேற்றைய முஹைதீனின் உரையில், கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு முரணான மற்றும் சட்டத்தின் ஆட்சியில் எதிர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு அரசு நிறுவனங்களின் நம்பகத்தன்மையையும் பாதிக்கும் கூறுகள் இருந்தன என்று அவர்கள் தெரிவித்தனர்.

அந்த உரையில், மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை நம்பிக்கையை இழந்ததை பிரதமர் தெளிவாக ஒப்புக் கொண்டார் என அக்மாலும் சீயூவும் கூறினர்.

“கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 43 (4)-இன் படி, பிரதமருக்கு மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்றால், மாமன்னரால் நாடாளுமன்றம் கலைக்கப்படாவிட்டால், அவர் இராஜினாமா செய்ய வேண்டும்.

“எனினும், இராஜினாமா செய்வதற்குப் பதிலாக, அவர் பிரதமராக நீடிப்பதற்கு ஆதரவளிக்கக் கோரி, முஹைதீன் மக்களவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கையூட்டாகப் பல்வேறு சலுகைகளை வழங்கினார்,” என்று அவர்கள் கூறினர்.

நேற்று நாடு முழுவதும் ஒலிபரப்பப்பட்ட ஒரு சிறப்பு உரையில், முஹைதீன் தனக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற சில அம்னோ எம்.பிக்கள் இருந்தபோதிலும், பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய மாட்டேன் என்று வலியுறுத்தினார்.

தற்போது எம்பிக்கள் யாருக்கும் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்று அந்தப் பெர்சத்து தலைவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அவரை ஆதரிக்க ஒப்புக்கொண்டு, அவர் பிரதமராக இருப்பதற்கு வழி வகுத்தால், எதிர்க்கட்சியினருக்குச் சில நிர்வாக சீர்திருத்தங்களை வழங்குவதாகவும் முஹைதீன் சொன்னார்.

அக்மால் மற்றும் சியூவின் கூற்றுப்படி, பொதுக் கூட்டங்களில் வாக்களிப்பது அல்லது வாக்களிக்க ஊக்குவிப்பதற்காக பொது அமைப்பு சார்ந்த அதிகாரிகளுக்குக் கையூட்டு வழங்குவது சம்பந்தமாக எம்ஏசிசி சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ் முஹைதீன் குற்றத்தைச் செய்ததாக பிகேஆர் இளைஞர் பிரிவு (ஏஎம்கே) சந்தேகிக்கிறது.

“கையூட்டின் ஆதாரம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதால், முஹைதீனிடம் விசாரணை நடத்த எம்ஏசிசி தனது அறிக்கையை வெளிப்படையாக சமர்ப்பிக்க வேண்டுமென ஏஎம்கே கேட்டுக்கொள்கிறது,” என்று அவர்கள் கூறினர்.