நீண்ட கால சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது – திஐ-எம்

நீண்டகால சீர்திருத்தங்களைச் செயல்படுத்த, ஓர் ஒற்றுமை அரசாங்கம் அல்லது இடைக்கால அரசாங்கம் விரைவில் சாத்தியமாகும் என்று திரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்-மலேசியா (திஐ-எம்) தெரிவித்துள்ளது.

அந்த சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், சிறந்த மற்றும் நீண்ட கால சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்த ஒரு பிரச்சார அணியைத் திரட்ட வேண்டிய அவசியம் உள்ளது, இதனால் அதிகாரம் மக்களின் கைகளில் வைக்கப்படும் என்று அது கூறியுள்ளது.

சாதாரண சூழ்நிலைகளில், பிரதமரின் சட்டபூர்வமான இத்தகையச் சீர்திருத்தங்கள் மற்றும் சோதனைகள் நாடாளுமன்றத்தின் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று திஐ-எம் கூறினார்.

அதைச் செய்ய முடியாவிட்டால், கூட்டாட்சி அரசியலமைப்பின் விதிகளின்படி பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றார்.

“இருப்பினும், இது இதற்கு முன் நடந்திடாததொரு சூழ்நிலை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மோசமான மேலாண்மை, அதிகார அத்துமீறல் மற்றும் அரசியல் ஆகியவற்றால் நாம் அனைவரும் ஒரு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாம் வாக்களித்த சீர்திருத்தங்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளில் நாம் முறையிட்ட மாற்றங்கள் ஆகியவற்றிற்கு, வருமானத்தையும் அன்பானவர்களையும் இழந்துள்ள சூழ்நிலையில், மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலையில் இப்போது ​​அரசாங்கம் உள்ளது.

“நாம் நாடாளுமன்ற ஜனநாயகம், வலுவான நிறுவனங்கள், நிர்வாகத்திலிருந்து நீதித்துறையின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, கால வரம்பு மற்றும் அதிகாரங்களைப் பிரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று திஐ-எம் கூறியது.

கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் முஹைதீன் யாசின் – பெரும்பான்மை ஆதரவு பிரச்சினையை எதிர்கொண்டுள்ள நிலையில் – நாட்டில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள உறுதியளித்தார், அதற்குப் பதிலாக அவர் தனது பதவியை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள எதிர்க்கட்சியினரின் ஆதரவைக் கேட்டார்.

மற்றவற்றுடன், முஹைதீன் வாக்கு18-ஐ நிறைவேற்றுவதாகவும் – இது ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது – அதே போல், அனைத்து எம்.பி.க்களுக்கும் ஒரே மதிப்பிலான ஆண்டு ஒதுக்கீடுகள் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.

நாடாளுமன்றச் சிறப்பு தேர்வுக் குழுவில் பாதியை, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தலைமை வகிக்க அனுமதிப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

முஹிதீனால் வழங்கப்பட்ட மேலும் இரண்டு வாக்குறுதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவலைத் தடுப்பதற்கும் பிரதமரின் பதவிக்காலத்தை இரண்டு தவணைகளாகக் குறைப்பதற்கும் சட்டமியற்றுதல் ஆகும்.

டாமான்சாரா எம்பி டோனி புவா மற்றும் ஓங் கியான் மிங் (பாங்கி) தவிர, முஹைதீனை ஆதரிக்காத அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்களவை உறுப்பினர்களும் அத்தூண்டுதல் தொகுப்பை நிராகரித்தனர்.

சிலர் முஹைதீன் “கையூட்டு” கொடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டினர், சிலர் இது தாமதமான சலுகை என்று கூறினர்.