கோலாலம்பூரில் பெர்சத்து தலைவர்கள் சந்திப்பு

பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவர்கள், தற்போது கோலாலம்பூர், பப்ளிகாவில் உள்ள தேசியக் கூட்டணி (பிஎன்) தலைமையகத்தில் சந்திப்பு ஒன்றை நடத்துகின்றனர்.

அரசாங்கத்தின் நிலை குறித்த பல்வேறு ஊகங்கள், தொடர்ந்து கவலையளித்து வரும் நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.

மேலும், பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின் பிரதமராக இருக்கும் நிலை கேள்விக்குறியாக உள்ளது. அந்தப் பாகோ எம்பி, பிரதமராக தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று பொதுமக்களிடையே வதந்திகள் பரவி வருகின்றன.

கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த நாடாளுமன்ற எம்.பி.க்கள் :

  • முஸ்தபா முகமது (ஜெலி)
  • மொஹமட் ரெட்ஜுவான் யூசோஃப் (அலோர் காஜா),
  • அஹ்மத் ஃபைசல் அஸுமு (தம்புன்)
  • முகமது ரஷித் ஹஸ்னான் (பத்து பஹாட்)
  • எட்மண்ட் சாந்தர குமார் ராமநாயுடு (சிகாமாட்)
  • சைஃபுதீன் அப்துல்லா (இந்திரா மக்கோத்த)
  • ஸுரைடா கமருதீன் (அம்பாங்)
  • டாக்டர் ஏ சேவியர் ஜெயக்குமார் (கோலா லங்காட் – சுயேட்சை)
  • லேரி ஸ்ங் (ஜூலாவ் – சுயேட்சை)

முன்னதாக, அமைச்சரவை ஆதாரங்களை மேற்கோள் காட்டி, முஹைதீன் நாளை பிரதமர் பதவியில் இருந்து விலகுவார் என்று சின் சியு டெய்லி கூறியது.

அலுவலகத்தைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக, பெயரிட மறுத்த மற்றொரு ஆதாரத்தையும் அந்த அறிக்கை மேற்கோள் காட்டியது.

சினார் ஹரியான் மற்றும் உத்துசான் மலேசியா இரண்டும், நேற்று இரவு ஓர் அறிக்கையை வெளியிட்டன, சில அமைச்சர்களின் ஊழியர்கள் நேற்று மதியத்திலிருந்து அலுவலகப் பொருள்களை மூட்டைக் கட்டத் தொடங்கியுள்ளதாக அவை கூறின.

நேற்றிரவு, மலேசியாகினி முஹைதீன் நாளை யாங் டி-பெர்த்துவான் அகோங்கை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.