பி.எச். தலைவர்கள் எதிர் தரப்பினருடன் பேச அனுமதிக்கப்படுகிறார்கள் – குவான் எங்

பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவர்கள், தங்கள் அரசியல் போட்டியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கப்படுவதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

இருப்பினும், பி.எச்.-இன் மூன்று முக்கியத் தலைவர்கள் – பிகேஆர் தலைவர் அன்வர் இப்ராகிம், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் லிம் – அவ்வாறு செய்வதற்கு முன் ஒருவருக்கொருவர் ஆலோசிக்க வேண்டும் என்றனர்.

இது பிஎச் தலைமை மன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவு என்று அவர் கூறினார்.

“டிஏபி, பிகேஆர் மற்றும் அமானாவின் முதல் மூன்று தலைவர்களைத் தவிர, பிஎச்-இல் உள்ள மூன்று கட்சிகளைச் சேர்ந்த பல எம்.பி.க்களும் தலைவர்களும் அரசியல் எதிரிகளுடன் பல விவாதங்களை நடத்தியுள்ளனர்.

“எனினும், அத்தகைய விவாதங்கள் அந்தந்தக் கட்சி தலைமை மற்றும் பிஎச் தலைமை மன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும், அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தல் வேண்டும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

தேசிய கூட்டணியுடன் (பிஎன்) டிஏபி எம்.பி.க்கள் நடத்தியப் பேச்சுவார்த்தை “சாதகமற்றது” என்ற செய்தி அறிக்கைகளுக்கு லிம் பதிலளித்தார், இது பிரதமர் முஹைதீன் யாசினின் ஆகஸ்ட் 13 சலுகைக்கு வழிவகுத்தது.

இன்று காலை, சின் சியூ டெய்லி, ஓர் அநாமதேய ஆதாரத்தை மேற்கோள்காட்டி, நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் இந்த விவகாரம் குறித்து பாங்கி எம்.பி, ஓங் கியான் மிங் மற்றும் டாமான்சாரா எம்பி டோனி புவா ஆகியோருடன் விவாதித்ததாகக் கூறினார்.

பின்னர், தி ஸ்டார், இன்னொரு அநாமதேய ஆதாரத்தை மேற்கோள் காட்டி, டிஏபி விவாதிக்க “மிகவும் விருப்பமாக” இருப்பதாகக் கூறியதோடு, “பல சந்திப்புகள்” இருக்கலாம் என்றது.

மேலதிக கருத்துகளுக்கான மலேசியாகினியின் கோரிக்கைக்கு, புவா பதிலளிக்கவில்லை. கருத்து கேட்க ஓங்-ஐ அணுக முடியவில்லை.

ஒரு முடிவை எடுப்பதற்கு முன் பி.எச். குறைந்தபட்சம் முஹைதீனின் சலுகையைக் கேட்க வேண்டும் என்று புவா-உம் ஓங்-உம் முன்பு பகிரங்கமாக கூறியிருந்தனர்.

எவ்வாறாயினும், பி.எச். தலைமை மன்றமும் பிற எதிர்க்கட்சிகளும் முஹைதீன் வழங்கிய வாய்ப்பை, அறிவித்த சிறிது நேரத்திலேயே நிராகரித்தன.

ஒரு தனி அறிக்கையில், மூத்த டிஏபி தலைவர் லிம் கிட் சியாங், கோவிட் -19 நெருக்கடி, பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரக்கூடியப் பேச்சுவார்த்தைகளில் பி.எச். “திறந்த மனதுடன்” இருக்க வேண்டும் என்று கூறினார்.

இருப்பினும், விவாதங்கள் இரண்டு கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார் – ஒன்று, கோவிட் -19 தொற்றைக் கையாளும் சூழ்நிலையை மாற்றக்கூடிய ஒரு திட்டத்தை முஹைதீன் வழங்க வேண்டும்.

இரண்டாவது, இந்தத் திட்டம் தேசிய நலனுக்கானது என்று டிஏபி மற்றும் பிஎச்-இன் ஒப்புதலை முஹைதீன் பெற வேண்டும்.