அம்பிகா : ‘ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவ வேண்டும்’

மலேசியாவில் இப்போது 13,000 உயிர்களைக் கொன்ற கோவிட் -19 தொற்றுக்கு மத்தியில், நச்சு அரசியல் மற்றும் நிர்வாகத் திறமையின்மை பற்றிய கவலையில், அரசியல்வாதிகள் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென அம்பிகா ஸ்ரீனிவாசன் ஒரு மனுவைத் தொடங்கியுள்ளார்.

இந்த நேரத்தில் அரசியல் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புதிய பிரதமர் ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென அம்மனுவின் வழி அவர் அழைப்பு விடுத்தார்.

“நாம் நம் வாழ்க்கையின் மிகப்பெரிய நெருக்கடியைத் தற்போது எதிர்கொண்டுள்ளாம்.

“ஆனால், துரதிருஷ்டவசமாக நாம் தொற்றுநோயைச் சமாளிக்க திறமையில்லாத, ஒரு நச்சு அரசியலை எதிர்கொண்டுள்ளோம் வேண்டும்,” என்று அவர் மலேசியாகினியிடம் அவர் சொன்னார்.

நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றுவதற்குப் போராடிய பெர்சே இயக்கத்தின் அந்த முன்னாள் தலைவர், அடுத்து நியமிக்கப்படவுள்ள புதிய பிரதமர், 2018, 14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு பதவியேற்கும் மூன்றாவது பிரதமராக இருப்பார் என்று கூறினார்.

ஆனால் அரசியல்வாதிகளிடையே அமைதி இல்லை. அவர்களால் தங்கள் வேறுபாடுகளை மீற முடியவில்லை. மாறாக, அவர்கள் நிலைமையை மோசமாக்குகிறார்கள்.

“எனவே, அவர்கள் ஒன்றாக வேலை செய்ய வலியுறுத்த வேண்டிய நேரம் இது. அவர்கள் எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது, தங்களுக்கு அல்ல. நாட்டை மீட்டெடுக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னாள் வழக்கறிஞர் மன்ற தலைவருமான அம்பிகா, ஒற்றுமை அரசாங்கம் அரசியல் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, அனைத்து கட்சிகளிலிருந்தும் சிறந்த கூறுகளை வெளிபடுத்தும் என்று நம்புகிறார்.

“தவளைகள்” இருக்காது, ஆதரவை வாங்கும் முயற்சிகள் இருக்காது, தடுமாறும் அரசாங்கம் இருக்காது.

“அவர்களால் மட்டுமே இந்த நாட்டை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும், இதில் கவனம் செலுத்தும் ஓர் அரசாங்கம் வேண்டும் அல்லவா?”

மகளிர் பங்கேற்பை அதிகரிக்கவும்

அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப், 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றதை அடுத்து, நாட்டின் ஒன்பதாவது பிரதமராக நியமிக்கப்படுவார் என்று கருதப்படுகிறது.

அம்பிகாவின் மனுவில், அடுத்த பொதுத் தேர்தல் வரையில், ஒரு வலுவான மற்றும் நிலையான அரசாங்கம் நிறுவப்படுவது முக்கியம் என்று கூறப்பட்டுள்ளது.

“இந்த அரசாங்கம் இருதரப்பிலிருந்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், நாடாளுமன்ற மேற்பார்வைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும், தொற்றுநோய் மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மையிலிருந்து நாட்டை வழிநடத்துவதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

அந்த மனுவில், “அரசாங்கத்தில் அதிக மகளிர் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும்,” என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான வளர்ச்சியில், இஸ்மாயிலைப் பிரதமர் பதவிக்கு நிராகரித்த மற்றொரு மனுவுக்கு, நேற்று நள்ளிரவு வரை 300,000 கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளது.

முஹைதீனின் நிர்வாகத்தில் மூத்த அமைச்சராக இருந்தபோது கோவிட் -19 நெருக்கடியை நிர்வகிக்க இஸ்மாயில் தவறிவிட்டார் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.