நேற்று, கோவிட் -19 தொற்றுக்குப் பலியானவர்களை நினைவுகூரும் பேரணியில் பங்கேற்றதற்காகப், போலீசாரால் கைது செய்யப்பட்ட 31 ஆர்வலர்களும் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டனர்.
கோவிட் -19 தொற்றின் போது, பேரணிகளைத் தடுக்கும் விதிகளை மீறியதற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் RM2,000 – மொத்தம் RM62,000 தண்டம் விதிக்கப்பட்டது.
அந்த இளைஞர்கள் குழுவில் 17 ஆண்களும் 14 பெண்களும் பங்கு பெற்றிருந்தனர். அவர்களில் மக்கள் ஒற்றுமைச் செயலகத்தைச் (எஸ்.எஸ்.ஆர்.) சார்ந்த, சமீபத்தில் #லாவான் போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களும் இருந்தனர்.
நேற்று, டத்தாரான் மெர்டேக்காவில் கூடிய அவர்கள், நெருக்கமான போலீஸ் கண்காணிப்புக்கு மத்தியில் மெழுகுவர்த்தியை ஏற்றினர்.
பங்கேற்பாளர்கள் எஸ்எஸ்ஆர்-இன் அறிக்கையைப் படித்த பிறகு, பங்கேற்பாளர்களின் அடையாள அட்டையைப் பறிமுதல் செய்த போலீசார், இரவு 8.30 மணியளவில் பேரணியைப் நிறுத்தினர்.
“ஆவண நோக்கங்களுக்காக”, டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு அவர்களைப் பின்தொடருமாறு காவல்துறையினர் பங்கேற்பாளர்களிடம் சொல்வதையும் கேட்க முடிந்தது.
பிளாக் மரியா லாரியில் பல பங்கேற்பாளர்களைப் போலீசார் இழுத்துச் சென்றனர், பின்னர் அவர்களை அங்கிருந்து வெகு தொலைவில் உள்ள டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும், அதிகாலை 1.10 மணிக்கு விடுவிக்கப்பட்டதாக பெர்சே ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தது.
நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், அமைதியான ஒன்றுகூடல் சட்டம் மற்றும் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1988-இன் கீழ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக டாங் வாங்கி போலீஸ் தலைவர் நூர் டெல்ஹான் யஹாயா கூறினார்..
நேற்றைய நிலவரப்படி, மலேசியாவில் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, மொத்தம் 13,480 கோவிட் -19 நோயாளிகள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.