மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, கடந்த திங்கட்கிழமை பதவி விலகிய முஹைதீன் யாசினுக்குப் பதிலாக, அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகூப்பைப் புதிய பிரதமராக நியமிக்க ஒப்புதல் அளித்தார்.
“கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 40 (2) (a) மற்றும் பிரிவு 43 (2) (a)-இன் படி, மாண்புமிகு டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி பின் யாகோப் (எம்பி பெரா) மலேசியாவின் 9-வது பிரதமராக நியமிக்கப்படுகிறார்.
“ஆகஸ்ட் 21, 2021 (சனிக்கிழமை), மதியம் 2.30 மணிக்கு, பதவியேற்பு விழா அரண்மனையில் நடைபெறும்,” என்று அரண்மனை பேச்சாளர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பதவியேற்கும் புதியப் பிரதமர், கோவிட் -19 தொற்றுநோயை உடனடியாக எதிர்த்துப் போராடும் அரசாங்கத்தின் முயற்சிகளைத் தொடர வேண்டும் என்ற கருத்தையும் மாமன்னர் வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.
“அதுமட்டுமின்றி, பிரதமர் நியமனத்தால் நாட்டில் நிலவிவரும் அரசியல் நெருக்கடியை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும், அனைத்து பிரதிநிதிகள் உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் அரசியல் விளையாட்டை ஒதுக்கி, கோவிட் -19 தொற்றுநோய்க்குத் தீர்வு காண ஒத்துழைக்கலாம் என்றும் மாமன்னர் தெரிவித்தார்.
“கோவிட் -19 தொற்றுநோயால் நாடு சுகாதார பிரச்சினைகள் மற்றும் பொருளாதார மந்தநிலையுடன் போராடும் நேரத்தில், மக்கள் முடிவில்லாத அரசியல் கொந்தளிப்புடன் இருக்கக்கூடாது என்ற கருத்தை மாமன்னர் மீண்டும் வலியுறுத்தினார்.
அகோங் தலைமையில், இன்று மாலை 2.30 மணியளவில், மலாய் அரசர்களுடனான சந்திப்பு அரண்மனையில் நடந்து முடிந்த பிறகு, இஸ்மாயில் சப்ரியின் நியமனம் அறிவிக்கப்பட்டது.