பாஸ் ஆதரவாளர் மன்றம் (டிஎச்பிபி), அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பைப் பிரதமர் வேட்பாளராக ஆதரிப்பது குறித்து, தேசியக் கூட்டணி (தே.கூ.) தலைவர் முஹைதீன் யாசின் சமர்ப்பித்த நிபந்தனைகளை வரவேற்றது.
டிஎச்பிபி தலைவர், செனட்டர் என் பாலசுப்ரமணியம், இந்த நிபந்தனை யாரையும் இழிவுபடுத்துவதாக இல்லை, ஆனால் தேசியக் கூட்டணியின் கொள்கையை, ஓர் அரசாங்கமாக, ஒருமைப்பாட்டோடு பராமரிக்க வேண்டும், அதிகார அத்துமீறல்களை ஒழிக்க வேண்டும் எனும் மக்களின் கருத்துக்கு ஏற்ப அது அமைந்துள்ளது என்றார்.
“என்னைப் பொறுத்தவரை இது ஓர் அச்சுறுத்தலோ அல்லது எந்தக் கட்சியையும் இழிவாகக் கருதுவதோ இல்லை, மாறாக இந்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டால், இஸ்மாயில் பிரதமராக இருப்பதில் மக்களுக்கு அதிக நம்பிக்கை உண்டாகும்,” என்று அவர் தெரிவித்ததாக ஹரகாஹ்டெய்லி செய்திகள் கூறுகின்றன.
நேற்று, ஓர் அறிக்கையில், இஸ்மாயில் சப்ரிக்கான தே.கூ.-இன் ஆதரவு நிபந்தனைக்குட்பட்டது என முஹைதீன் கூறியிருந்தார்.
இஸ்மாயில் சப்ரி, தனது அமைச்சரவை உறுப்பினர்கள் ஒருமைப்பாடு, நம்பிக்கை மற்றும் எந்தவொரு நீதிமன்ற குற்றச் சாட்டுகளிலிருந்தும் விடுபட்டவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதோடு, அதிகாரங்களைப் பகிர்தல், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் மற்றும் அரசியலமைப்பு மன்னரின் கருத்தை நிலைநாட்ட வேண்டும் என்றார் முஹைதீன்.
இந்தக் கருத்து, அம்னோவில் ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ள பல முக்கிய நபர்களைக் குறிப்பதாக நம்பப்படுகிறது.
ரந்தாவ் பஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர், சித்தி ஸைலா மொஹமட் யூசோப்பும் இதனை ஆதரித்தார், இது தே.கூ. ஒருமைப்பாட்டோடு அரசாங்கத்தின் கொள்கையை நிலைநிறுத்துவது மட்டுமல்லாமல், ஒரு நிலையான, ஆற்றல்மிக்க அரசாங்கத்தைப் பெற்று, மக்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாகவும் அமையும் என்று அவர் கூறினார்.
மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் துணை அமைச்சருமான அவர், இதற்குப் பிறகு ஆளும் அரசுக்கு எம்.பி.க்கள் ஆதரவு அளிப்பது குறித்து மேலும் பிரச்சினைகள் எழக்கூடாது என்று நம்புவதாக சொன்னார்.
“தற்போது நாம் பார்க்கிறபடி, மாமன்னர் இந்த அரசியல்வாதிகளை உபசரிப்பதில் சோர்ந்துவிட்டார். ஒவ்வொரு ஆண்டும் சத்தியப் பிரமாணம் செய்வது, மன்னரை எதிர்கொள்வது, ஒரு மாற்றம் வேண்டுமென நாம் விரும்புகிறோம்.
“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, தேர்தல்கள் இனி நடைபெறும். ஆதரவைத் திரும்பப் பெறுவது, ஆதரவை வழங்குவது என எந்தப் பிரச்சனையும் இனி இல்லை,” என்று அவர் தெரிவித்ததாக ஹரகாஹ்டெய்லி மேற்கோள் காட்டியது.
இருப்பினும், முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனும் பொக்கோ செனா எம்.பி.யும், அமானா துணைத் தலைவருமான மஹ்ஃபுஸ் உமர் இருவரும் தே.கூ. சமர்ப்பித்த நிபந்தனைகள் சர்ச்சைக்குரியவை என்றனர்.
பிரதமருக்கான எம்பிக்களின் ஆதரவு நிபந்தனையின்றி செய்யப்பட வேண்டும் என்று அம்பிகா கூறினார். எனவே, இஸ்மாயில் சப்ரிக்கு தே.கூ. வழங்கிய நிபந்தனை ஆதரவு செல்லுபடியாகக் கருத முடியாது என்று அம்பிகா கூறினார்.
எவ்வாறாயினும், பெர்சத்து உச்ச தலைமை மன்ற உறுப்பினர், முஹம்மது ஃபைஸ் நாமன், முஹைதீன் முன்வைத்த நிபந்தனையைத் தற்காத்தார், நிபந்தனையற்ற ஆதரவைக் குறிப்பிடுவது தனிப்பட்ட எம்.பி.க்களுக்காக, அரசியல் குழுக்களுக்காக அல்ல.
அரண்மனையும் கூட்டாட்சி அரசியலமைப்பிற்குக் கட்டுப்பட்டது, இது எந்த ஒரு தனிமனிதரையும் பிரதமராக ஆதரிப்பதற்கு எந்த நிபந்தனைகளையும் விதிப்பதை தடுக்கவில்லை.
“மற்றும் நிபந்தனைகள் அச்சுறுத்தல்கள் என்பதற்கு அவசியமில்லை, கொள்கைகள் மற்றும் ஆலோசனைகளை வலியுறுத்தினால் மட்டும் போதும்.
“இஸ்மாயிலுக்கு எதிரான தே.கூ. நிபந்தனைகளின் உள்ளடக்கத்தில், என்ன தவறு இருக்கிறது என்று நான் அம்பிகா மற்றும் மஹ்ஃபூஸிடம் கேட்க விரும்புகிறேன்?
“வருங்கால பிரதமரிடம், அமைச்சரவைக்கு நேர்மையானவர்களைத் தேர்வு செய்யச் சொல்வது தவறா? அரசியலமைப்பு முடியாட்சியின் கொள்கையைத் தூண்டுவது தவறா?
“உறுதியாக, அதில் யாருக்கும் எதிரான அச்சுறுத்தல்கள் இல்லை. ஏன் அம்பிகா மற்றும் மஹ்ஃபுஸ் அதிர்ச்சி அடைகிறார்கள்?” என்று அவர் இன்று ஓர் அறிக்கை வாயிலாக கேள்வி எழுப்பினார்.