`இஸ்மாயில் எதிர்க்கட்சிகளையும் இணைத்துக்கொள்வார்` – டிஏபி நம்பிக்கை

கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போரில், அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைப்பது, புதியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும் என்று டிஏபி சமாதானத் தொனியில் கூறியுள்ளது.

“மாட்சிமை தங்கியப் பேரரசரால், நாட்டின் ஒன்பதாவது பிரதமராக இஸ்மாயில் நியமிக்கப்பட்டதற்கு டிஏபி வாழ்த்து தெரிவிக்கிறது.

“13,713 இறப்புகள் மற்றும் 1,513,025 நோயாளிகளை ஏற்படுத்தியக் கோவிட் -19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், தோல்விகள் மற்றும் தவறுகளைச் சரிசெய்ய அனைத்து மக்களையும் ஒருங்கிணைப்பதே இஸ்மாயிலின் முக்கியப் பணியாகும்.

“… அதோடு, நாட்டின் பொருளாதாரத்தை மந்தநிலையிலிருந்து மீட்டு, வேலைகள் மற்றும் வணிகங்களைக் காப்பாற்ற மலேசியர்களுக்கு அவர் உதவ வேண்டும்,” என்று அது ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

தான், அனைத்து மக்களுக்குமான ஒரு பிரதமர் என்பதை இஸ்மாயில் எப்போதும் அறிந்திருக்க வேண்டும், மேலும் இனம், மதம் மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல், மக்கள் நலன்களுக்காகச் சேவை செய்ய வேண்டும், அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அது மேலும் தெரிவித்தது.

இதற்கிடையில், டிஏபி துணைத் தலைமைச் செயலாளர், தெரசா கோக்கும் அம்னோ துணைத் தலைவருக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்துகொண்டார்.

புதிய அரசாங்கத்தை உருவாக்க போதுமான நாடாளுமன்ற ஆதரவைப் பெற பிஎச் கடுமையாக உழைத்தது, ஆனால் எந்தப் பயனும் இல்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

“நான் கொஞ்சம் சோகமடைந்தேன், ஆனால் என் தொகுதி மக்கள் மற்றும் வட்டாரப் பிரச்சனைகளை எனது உதவியாளர்கள் மற்றும் நிருபர்களுடன் விவாதிக்கத் தொடங்கியபோது இந்த உணர்வு மறைந்துவிட்டது, மேலும் புதியக் கோவிட் -19 நேர்வுகள் இன்று (நேற்று) அதிகபட்ச எண்ணிக்கையை (23,564) அடைந்துள்ளது, 233 நோயாளிகள் கோவிட்-19 தொற்று காரணமாக இறந்துள்ளனர்.

“அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், நாங்கள் எழுப்பவுள்ள பிரச்சினைகளைச் சக பிஎச் எம்.பி.க்களும் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

குறிப்பாக, கோவிட் -19 தொற்றைச் சமாளிக்கும் முயற்சியில், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கும் ஒரு பிரதமராக இஸ்மாயில் வருவார் என்ற நம்பிக்கையைச் தெரசா வெளிப்படுத்தினார்.

“அவர் அனைத்து குடிமக்களுக்குமான ஒரு தலைவராகவும், தொலைநோக்கு மற்றும் குறிக்கோளைக் கொண்டவராகவும் விளங்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இஸ்மாயிலின் தலைமையிலான அரசாங்கம், தேசிய முன்னணி அரசாங்கமா அல்லது தேசியக் கூட்டணி அரசாங்கமா என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டுமென தெரசா வலியுறுத்தினார்.

இஸ்மாயில் இன்று பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நம்பிக்கை மற்றும் விநியோக ஒப்பந்தத்தை (சி.எஸ்.ஏ.) எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முஹைதீன் யாசினுடன், அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முதல் தரப்பு டிஏபி ஆகும்.

இருப்பினும், இந்த நடவடிக்கை அடிமட்டத்தில் பலரின் விமர்சனங்களுக்கு ஆளானதோடு, பிஎச் தலைமை முஹைதீன் முன்வைத்த சலுகைகளை இறுதியில் நிராகரித்தது.

ஒரு சில டிஏபி எம்.பி.க்கள் – டோனி புவா (டாமான்சாரா) மற்றும் ஓங் கியான் மிங் (பாங்கி) போன்றோர் – முஹைதீனின் பலவீனமான நிலையை, நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள சில அம்னோ தலைவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் கவலை தெரிவித்தனர்.

பெர்சத்து தலைவரான முஹைதீன், குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் எந்தவொரு தலைவரும், அமைச்சரவையில் நியமிக்கப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் இஸ்மாயிலைப் பிரதமராக ஆதரிக்க ஒப்புக்கொண்டார்.