அன்வர் : ஜிஇ15-க்குக் கடினமாக உழைப்பதே எதிர்கட்சியின் சவால்

அரசியல் நெருக்கடிக்குப் பிறகு, அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் பிரதமராக நியமிக்கப்பட்டதால், 15-வது பொதுத் தேர்தலுக்குத் (ஜிஇ15) தயாராவதற்கு எதிர்க்கட்சிகள் இப்போது கடினமாக உழைக்க வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வர் இப்ராகிம் கூறினார்.

இஸ்மாயிலின் நியமனம் அரசியலமைப்பு, நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு முடியாட்சி ஆகியவற்றிற்கு ஏற்பச் செய்யப்பட்டது என்பதை எதிர்க்கட்சிகள் கவனத்தில் எடுத்துக்கொண்டதாக அன்வர் கூறினார்.

முழு மரியாதையுடன், நான் ஒட்டுமொத்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இஸ்மாயில் சப்ரியைப் பிரதமராக நியமிப்பது குறித்த அகோங்கின் உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன்.

“எதிர்க்கட்சிகளைப் பொறுத்த மட்டில், ஜிஇ15-ஐ எதிர்கொள்ள இன்னும் கடினமாக உழைப்பது எங்களுக்கு ஒரு சவால்,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோய் நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் நாட்டின் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்குமான முயற்சிகள் தொடரப்பட வேண்டும் என்று அன்வர் கூறினார்.

“அனைத்து தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும், ஜிஇ15-ஐ நோக்கி கடினமாக உழைக்க வேண்டும் என்ற உறுதியுடன் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளுமாறு நாங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம், இதனால் கடந்த ஜிஇ-இல் நாங்கள் பெற்ற மக்கள் ஆணையை மீண்டும் பெற முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், இஸ்மாயில் இன்று பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.