புதிய அரசாங்கம் என்றாலும், அவசரகால நிலையை மீண்டும் அறிவிக்க வேண்டும் – டாக்டர் எம்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், புதிய அரசு விரைவில் பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவசரகால நிலையை அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

கோவிட் -19 தொற்று மோசமடையக்கூடும் என்பதால், நடவடிக்கை எடுக்க புதிய அரசாங்கம் அமையும் வரை காத்திருக்க நேரமில்லை என்று மகாதீர் கூறினார்.

“என்னை நம்புங்கள் இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. அது தானாகப் போகாது.

“தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எதிர்காலத்தில் இது மிகவும் தீவிரமானதாக இருக்கலாம். நாமும் அதற்கேற்ப இப்போதிருந்தே செயல்பட வேண்டும்.

“அரசியலையும் சட்டத்தையும் முதன்மையாக்காதீர்கள். உண்மையில், அவசரகால நிலையை அறிவிக்க வேண்டிய நேரம் இது, ஏனென்றால் அசாதாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், அரசாங்கம் அமையும் வரை நாம் காத்திருக்க முடியாது,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.

 

கோவிட் -19 தொற்றின் போது, நாட்டை நிர்வகிக்க தேசிய இயக்க மன்றம் (மகேரன்) போன்ற ஓர் அமைப்பை அமைக்க, அகோங்கிற்கு மகாதீர் முன்பு பரிந்துரைத்திருந்தார்.

இருப்பினும், இதற்காக சாதாரண ஜனநாயக நடைமுறைகளை இடைநிறுத்த வேண்டும் மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே செய்ய முடியும்.

பதவி விலகிய முஹைதீன் யாசினுக்குப் பதிலாக, அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று புதிய பிரதமராக இன்று பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

13 மே, 1969-ல் முதல் 1971 வரையில் ‘மகேரன்’ முறை நாட்டை நிர்வகித்தது.

அவரைப் பொறுத்தவரை, பல வல்லுநர்கள் தானாக முன்வந்து தங்கள் சேவைகளை வழங்கியுள்ளனர், ஆனால் முந்தைய முஹைதீன் நிர்வாகம் அதை நிராகரித்தது.

“அவர்களில் மருத்துவர்கள், பொருளாதார வல்லுநர்கள், சமூகவியலாளர்கள் மற்றும் பல துறைகளைச் சார்ந்தவர்களும் உள்ளனர். நெருக்கடிகளைக் கையாள்வதில் அவர்களுக்கு அனுபவம் உள்ளது. இது போன்ற தொற்றுநோய்களுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களால் உதவ முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.

கோவிட் -19 தொற்றைச் சமாளிக்க ஒரு குழுவை நியமிக்குமாறு அவர் அகோங்கிற்குப் பரிந்துரைத்தார்.