நாட்டின் 9-வது பிரதமராக இஸ்மாயில் சப்ரி பதவியேற்றார்

அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப், நாட்டின் ஒன்பதாவது பிரதமராகப் பதவியேற்றார்.

இன்று பிற்பகல் 2.29 மணிக்கு, இஸ்தானா நெகாராவில் யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா முன்னிலையில் இஸ்மாயில் பதவியேற்றார்.

இந்த நிகழ்வு தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் முகநூல் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

ஓர் அரசியல் கட்சியின் தலைவராகவோ அல்லது துணைத் தலைவராகவோ இல்லாத ஒருவர், பிரதமராகப் பதவியேற்பது இதுதான் முதல் முறையாகும்.

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தற்போது நீதிமன்றத்தில் ஊழல் வழக்கை எதிர்கொண்டுள்ளார், அதே நேரத்தில் துணைத் தலைவர் முகமது ஹசான் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை.

அம்னோ துணைத் தலைவராக இருக்கும் இஸ்மாயில், பெர்சத்துவின் தலைவரும் தேசியக் கூட்டணியின் தலைவருமான முஹைதீன் யாசினுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசியக் கூட்டணிக்கான ஆதரவை 15 அம்னோ எம்.பி.க்கள் திரும்பப் பெற்றதை அடுத்து முஹைதீன் பதவி விலகினார்.

இருப்பினும், அந்த 15 எம்.பி.க்களில் 14 பேர், முஹைதீனுக்குப் பதிலாக இஸ்மாயில் பிரதமராக நியமிக்கப்படுவார் என்றதனால் தேசியக் கூட்டணியை மீண்டும் ஆதரிக்க ஒப்புக் கொண்டனர்.

61 வயதான இஸ்மாயில் முஹைதீனின் அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்தார்.

முன்னதாக, இஸ்மாயில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் மற்றும் தற்காப்பு அமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர் உட்பட பல்வேறு அமைச்சரவைகளில் பல்வேறு இலாகாக்களில் பணியாற்றியுள்ளார்.

இன்றைய பதவியேற்பு விழாவில் அவருக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகளின் தலைவர்களும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் ஜாஹித், மசீச தலைவர் வீ கா சியோங், ம.இ.கா. தலைவர் எம் சரவணன், ஜிபிஎஸ் தலைவரும் சரவாக் முதல்வருமான அபாங் ஜோஹரி ஓபேங் மற்றும் பெர்சத்து ராக்யாட் சபா கட்சியில் (பிபிஆர்எஸ்) இருந்து ஆர்தர் ஜோசப் குருப் ஆகியோரும் இருந்தனர்.