கிளாசிக் சுப்பையா காலமானார் – இந்தியச் சமூகம் ஒரு தமிழ் உணர்வாளரை  இழந்தது!

நமது நாட்டின் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கும் தமிழ்மொழி மேம்பாட்டுக்கும்  உணர்வுப் பூர்வமாக பங்காற்றிய சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி வாரியங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைவர் கிளாசிக் சுப்பையா இன்று மாலை (21.8.2021)  காலமானர்.

கோவிட்-19 தொற்றால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் செயற்கை சுவாசமுறை வழி தீவிர  சிகிச்சை பெற்று வந்த அன்னார், இன்று மாலை சுமார் 6.00 மணியளவில் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இளமை முதலே தன்னலமற்ற வகையில் செயலாற்றிய சுப்பையா, அரசியல் கட்சிகளிலும் பொது இயக்கங்களிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். மஇகா அரசியல் கட்சியில் கிளை தலைவராகவும் ஒரு சிறந்த தொண்டராகவும் இருந்தவர். உரிமை குரலை உரக்க எழுப்பும் இவரின் தன்மைக்கு இண்ட்ராப் பேரணி ஒரு மாற்றுப் பாதையைக் காட்டியது எனலாம். கட்சி அரசியலிலிருந்து விலகிய இவர் சமூக போராட்டவாதியாக மாறினார்.

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காகப் பெரும்பங்காற்றப் புறப்பட்ட இவர், பல பள்ளிகளின் மேம்பாட்டுக்காகச் செயலாற்றினார்.

அவற்றுள் மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியும் இராசாக் தமிழ்ப்பள்ளியும் அடங்கும்.

தமிழ் அறவாரிய அமைப்பின் முன்னெடுப்பில் அயராது செயல்பட்ட இவர் பல பள்ளிகளில் பள்ளி வாரியங்களை உருவாக காரணமாக இருந்தவர்.

சிலாங்கூர் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராக இருந்த சுப்பையா, அதன் திட்டங்களுக்குப்  பலவகையில் உதவியவராவார்.

அன்னாரின் பிரிவால் துயருரும் குடும்பத்தினர்களுக்கு,

மலேசியா இன்று, சிலாங்கூர் தமிழ்ச்சங்கம், மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி வாரியம், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி வாரியங்களின் ஒருங்கிணைப்பு, தமிழ் அறவாரியம் குழுவினர்களின்  ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது தெய்வீக ஆத்மா சாந்தியடையட்டும்.