அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, பெர்சத்து உச்ச மன்றம், நேற்று இரவு கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் கூடியது.
இந்தச் சந்திப்பில், துணைப் பிரதமர் பதவி விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்ற ஊகங்கள் இருந்தன.
இருப்பினும், பெர்சத்து தலைமைச் செயலாளர் ஹம்ஸா ஜைனுதீன் – இஸ்மாயிலின் துணை என்று கூறப்படும் வேட்பாளர்களில் ஒருவர் – சந்திப்பு ஒரு சுருக்கமான அமர்வு மட்டுமே என்று கூறினார்.
இந்தச் சந்திப்பு சில விஷயங்களைத் தெளிவுபடுத்துவதற்காக நடந்தது.
“சில நேரங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் எழும்போது, நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம்.
“நாட்டின் அரசியல் குழப்பம், தற்போதையப் பிரச்சினை, அதுபற்றி பேசினோம் அவ்வளவுதான்,” என்று ஹம்சா நேற்றிரவு பிரீமிரா ஹோட்டலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.
இஸ்மாயிலுக்கு, பெர்சத்து மற்றும் தேசியக் கூட்டணி கூட்டாளிகளின் ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறினார்.
நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில், பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின், துணைத் தலைவர் அஹ்மத் ஃபைசல் அசுமு, உச்சமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி, ரெட்சுவான் முகமட் யூசோப் மற்றும் மகளிர் தலைவர் ரினா ஹருன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஹம்ஸாவைத் தவிர, அஸ்மின் மற்றும் ரெட்சுவான் துணைப் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவார்கள் என்றும் ஊகிக்கப்படுகிறது.
முன்னதாக, பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் எடின் சியாஸ்லி ஷித், தேசிய முன்னணி உடனான சந்திப்பின் போது, முஹைதீனை மூத்த அமைச்சராக நியமிக்க முன்மொழிவு இருந்ததாகவும் கூறினார், ஆனால் அது இறுதி செய்யப்படவில்லை.