தேசியப் புனர்வாழ்வு மன்றத்தில் இணைய எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் அழைப்பு

நாட்டை இன்னமும் ஆட்டிப்படைக்கும் கோவிட் -19 தொற்றுநோயைச் சமாளிக்க, அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு இன்று இடம் வழங்கப்பட்டது.

தேசியப் புனர்வாழ்வு மன்றம் மற்றும் கோவிட் -19 தொற்றைச் சமாளிக்கும் சிறப்பு குழு ஆகியவற்றில் பங்கேற்பதன் மூலம் ஒத்துழைப்பை வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொள்வதாகப் பிரதமர் சொன்னார்.

யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் கட்டளைக்கு இணங்க, மக்கள் நல்வாழ்வையும் நலனையும் அடைய அனைத்து தரப்பினரும் வேறுபாடுகளை மறந்துவிட வேண்டும் என்று விரும்புவதாக, இன்று பிற்பகல் பிரதமராக தனது முதல் அதிகாரப்பூர்வ உரையில் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

நாட்டைத் தாக்கிய அரசியல் நெருக்கடி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியது என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

எனவே, கட்சி-கடந்த ஒத்துழைப்பை உருவாக்குவது உட்பட, கூட்டுத்தன்மை மூலம் அரசியல் நிலைத்தன்மையை உடனடியாக அடைய வேண்டும் என்றார்.

“எனவே, தேசியப் புனர்வாழ்வு மன்றத்தில் மற்றும் கோவிட் -19 தொற்றைச் சமாளிக்கும் சிறப்பு குழுவில் உறுப்பினராக இருக்க எதிர்க்கட்சி தலைமைக்கு நான் இடம் அளிக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

பெரா எம்.பி.யின் கூற்றுப்படி, அவர் உடனடியாக ஒரு சுகாதாரக் குழுவை தயார் செய்வார், அது நாட்டைச் சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேற்ற உதவும்.

“எனது அணியின் மீதான மக்களின் நம்பிக்கை வீணாகவில்லை என்பதை நிரூபிக்க சிறந்ததை செய்வேன் என்று நான் உறுதியளிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.