கருத்து | இன்று நமக்கு ஒரு புதியப் பிரதமர் இருக்கிறார். கடந்த சில வாரங்களில் என்ன நடந்தது? மிகைப்படுத்தி பேசப்பட்ட அரசியல் கொந்தளிப்பும் நெருக்கடியும் என்னவானது? என்ன மாற்றங்கள் நிகழ்ந்தன? உண்மையில், கோவிட் -19 நேர்வுகளும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்ததைத் தவிர, வேறு எதுவும் நடக்கவில்லை.
ஆகஸ்ட் 3, 2021-ல், அம்னோ உச்சமன்றம், தேசியக் கூட்டணி அரசு (தே.கூ.) மற்றும் முஹைதீன் யாசினுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, பிரதமரும் அவரது அமைச்சரவையும் இராஜினாமா செய்தனர். இது ஆகஸ்ட் 16, 2021-இல், முஹைதீன் அரசாங்கம் சட்டப்பூர்வமாக வீழ்ச்சியடைய வழிவகுத்தது. பின்னர், பல்வேறு நாடகங்கள் மற்றும் ஊகங்களுக்குப் பிறகு, அடுத்த நாள், ஆகஸ்ட் 17-ல், முஹைதீனை ஆதரிக்காத அதே அம்னோ, தனது கட்சி உறுப்பினரான இஸ்மாயில் சப்ரிக்கு முழு ஆதரவை வழங்கியது. ஆகஸ்ட் 21, 2021-ல் இஸ்மாயில் சப்ரி நாட்டின் 9-வது பிரதமராக நியமிக்கப்பட்டார்.
பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) மற்றும் அன்வார் இப்ராஹிமால், பின்வாசல் அரசாங்கம் என்று அழைக்கப்பட்ட பிரிவினரிடமிருந்து பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. அவர்களின் ஆதரவு அதிகரிக்கவில்லை, பெஜுவாங் மற்றும் வாரிசான் கட்சிகள் கூட தங்கள் ஆதரவைக் கொடுக்க பி.எச்.-உடன் இழுபறியாக இருந்தன.
இந்தக் கட்டுரை என் மீதான விமர்சனம், மக்கள் இயக்கம் மற்றும் எப்போதும் நீதி கோரி, ஒரு புதிய அமைப்பைக் கோரி அயராது போராடும் எனது நண்பர்கள் மீதான விமர்சனம்.
இஸ்மாயில் சப்ரியை அவரது பிகேபி நகைச்சுவையால் கேலி செய்வது, மீண்டும் பிரதமராகத் தவறிவிட்டார் என்றும், நீண்ட காலமாகப் பிரதமர் பதவிக்காகப் போராடி (PM-in-waiting), இன்னும் தோல்வியடைந்து வருகிறார் என்றும் அன்வர் இப்ராஹிமைக் கேலி செய்வது அல்லது மனதளவில் காயப்பட்டாலும், தோல்வியடைந்தோம் என்பதை ஒப்புக்கொண்ட டிஏபி அல்லது மாட் சாபுவைக் கேலி செய்வது போன்ற அணுகுமுறைகளை நாம் கையிலெடுக்கலாம்.
மக்கள் இயக்கம் உயரடுக்கு அரசியலையும், மேல்தட்டு அரசியலையும், சொர்க்க வாசல் வர்க்க அரசியலையும் வெல்லத் தவறியது. எங்களது ஜனநாயகச் செயல்முறை மக்களின் அதிகாரத்தைத் தொடர்ந்து ஏலம் விட காரணமாகிவிட்டது, முந்தைய இரண்டு பிரதமர்களான 8 மற்றும் 9-வது பிரதமர்களைத் தீர்மானிக்க மக்களுக்கு அதிகாரம் இல்லை, அதே நேரத்தில் மாமன்னரின் அதிகாரம் யார் பிரதமராக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, மிகவும் சக்தியற்ற குழுவாக இருக்கும் மக்கள் இவர்களின் நாடகங்களைப் பார்க்க மட்டுமே முடியும், தங்கள் திறன்பேசிகளுடன் விளையாடலாம், அல்லது ஏற்கனவே இருக்கும் நிலைமை பற்றி புகார் செய்யலாம். ஆம், நாம் தோல்வி அடைந்துவிட்டோம்.
நகர அரசியலும் மக்கள் இயக்கமும்
மலேசியாவில் மக்கள் இயக்கத்தைப் பார்த்தால், அது நகர்ப்புறங்களைச் சுற்றியே வருகிறது. பெர்சே இயக்கம் உண்மையில் ஒரு நகர்ப்புற இயக்கம். அதுபோலதான் இன்றைய இளைஞர்களை இணைத்த #லாவான் பேரணி – இதுவும் நகர்ப்புற இயக்கமாகும், அங்கு அவர்களின் வரம்பு மட்டுப்படுத்தப்பட்டு, நகர்ப்புற மற்றும் உயரடுக்கு அரசியலைச் சுற்றி வருகிறது.
இந்தக் குழுவினர், மக்கள் தங்களோடு இருக்கிறார்கள் மற்றும் மாற்றத்தைக் கோருகிறார்கள் என்று அவர்கள் அதிகளவில் நம்புகிறார்கள். சமூக ஊடகங்களில் உள்ள கருத்துக்கள் அவர்களின் கருத்துக்களை வலுப்படுத்துகின்றன, ஆனால், தேர்தல்களின் போது, அம்னோ மற்றும் பாஸ் போன்ற கட்சிகளின் சக்தி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அவர்களின் ஆதிக்கம் அதிகமாகவும் இருப்பது எப்படி சாத்தியமாகிறது?
இதைப் புரிந்துகொள்ள, மலேசியாவில் நாடாளுமன்ற இடங்களை இன ரீதியாக பிரித்தெடுத்ததை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 222 நாடாளுமன்றத் தொகுதிகளில், 125 கிராமப்புறங்களில் உள்ளன; அங்கு மலாய் பெரும்பான்மை தொகுதிகள் 78, சபா பூமிபுத்ரா தொகுதிகள் 16, பூமிபுத்ரா சரவாக் 18 மற்றும் சீனர் தொகுதிகள் 2. இந்தப் பகுதிகளில் அரசியல் ஆதிக்கம் செலுத்துவது யார்?
இன்று, ஒரு புதியக் கட்சி அல்லது மாஜு போன்ற ஒரு சிவில் சமூக அரசு சாரா குழுவின் கவனம் நகர்ப்புறங்களில் உள்ளது. மூடா போன்ற இளைஞர் கட்சிகளின் செல்வாக்கும் நகர்ப்புறங்களிலேயே உள்ளது. எனவே, பொதுத் தேர்தலின் போது, இந்த இடங்கள் அனைவரின் விருப்பமாகவும் இருக்கும், ஏனென்றால் இந்த இடங்களை வெல்வது எளிது. ஆனால், அது எதிர்க்கட்சிகளின் இடங்களை அதிகரிக்காது. உதாரணமாக, பக்காத்தான் ஹராப்பானில் (பி.எச்.) உள்ள எந்தக் கட்சியும் பாஸ் மற்றும் அம்னோவுடன் போட்டியிடக்கூடிய அடிமட்ட வலைபின்னல்களைக் கொண்டிருக்கவில்லை; இதனால், பி.எச். “மலாய் எதிர்ப்பு” கூட்டணி என்ற பிரச்சாரத்தைத் திறம்பட மறுக்க முடியாது.
நாம் கிராமப்புற சமூகம், விவசாயிகள், மீனவர்கள், ஃபெல்டா குடியேறிகள் மற்றும் பிறரை ஒழுங்கமைக்காத வரை, நமது அரசியல் ஒரு விரிவான வரவேற்பைப் பெறாது. இந்த விமர்சனம் எனது கட்சியான மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) மற்றும் இடதுசாரி இயக்கங்களையும் நோக்கி பாய்கிறது.
கூடுதலாக, நாங்கள் ஒடுக்கப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் ஆதரவை அடையவும் பெறவும் தவறிவிட்டோம். இன்று, 6 விழுக்காடு தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சங்கத்தில் இணைந்துள்ளர். ரைடர்ஸ் போன்ற பல <em>கிக்</em>
பொருளாதாரத் தொழிலாளர்கள், பலவகையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அவ்வப்போது அவர்களின் போராட்டங்களை நாம் பார்க்க முடிகிறது – ஃபூட் பண்டா மற்றும் ஆன்லைன் தொழிலாளர்கள் – ஆனால் அவை ஒரு வலுவான மற்றும் அதிகச் செல்வாக்குள்ள தொழிலாளர் இயக்கமாக கட்டமைக்கப்படவில்லை, இது தற்காலிகமானது மட்டுமே.
துரதிர்ஷ்டவசமாக, நம் இளைஞர்களின் இயக்கங்கள் ஒரு தனித்துவமான முகமாக மட்டுமே காணப்படுகிறது. கோஷங்கள் மற்றும் அதிநவீனத் தகவல் பரவல் தொழில்நுட்பமும் உள்ளன, ஆனால் உயரடுக்கு அரசியல் அமைப்பை எதிர்த்துப் போராடக்கூடிய ஒரு வலுவான அடிமட்ட மக்கள் இயக்கத்தை ஒழுங்கமைக்க முடியவில்லை.
பல இளைஞர்கள் நாட்டின் அரசியல் அமைப்பு முறையால் விரக்தி அடைந்துள்ளனர், ஆனால், அவர்கள் பணக்கார அரசியல் கட்சிகளுக்குச் சவாரி செய்யும் குதிரைகளாக மாறுகிறார்கள். பெரிய கட்சிகளால் தொழில் வாய்ப்புகளும் பதவிகளும் கொடுக்கப்படும்போது, அந்தத் திறமையானவர்களில் பலர் தடம் மாறி செல்கிறார்கள். அவர்கள் அரசியலில் ஒரு புதிய உயரடுக்கை உருவாக்குவார்கள். அவர்கள் தங்களால் கண்டனம் செய்யப்பட்ட அமைப்புக்குச் சவால் விடத் தவறி, சூழ்நிலையைக் கட்டுப்படுத்தவும் பழகிக்கொள்ளவும் தொடங்குகின்றனர். அதிகாரத்தை எடுக்க தேவையான சூழ்நிலைகளை உருவாக்கும் நடவடிக்கைகளைச் செய்யத் தவறி, வெரும் கோஷங்களுடனும் புரட்சியுடனும் காதல் கொண்டவர்களும் உள்ளனர்.
ஆனாலும், இன்று பல இளைஞர்கள் பெரும் பொருளாதார அழுத்தங்களை, வேலையின்மை பிரச்சினைகளை அனுபவித்து வருகின்றனர்; பலர் வேலை பாதுகாப்பு இல்லாமல் முறைசாரா துறையில் சிக்கியுள்ளனர். வாக்கு18
மற்றும் #லாவான் இயக்கங்கள் இந்த வெற்றிடத்தைச் சிறிது நிரப்பலாம். இருப்பினும், அவர்களின் செல்வாக்குத் தொழிற்சாலைகள், முறைசாரா துறை மற்றும் பிற சேவைத் துறைகளில் மிகவும் வலுவான இயக்கத்தை உருவாக்காமல், செயலில் மட்டும் அதிக நாட்டம் கொண்டதாக உள்ளது. ஒரு சிறிய இயக்கத்தால் ஒரு பெரிய இயக்கத்திற்கு வலிமையை உருவாக்க முடியாது, அது இருக்கும் வரை நாட்டின் அரசியல் உயரடுக்குக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருக்கும். பிரதான ஆளும் கட்சிகளின் தோல்விகளைவிட நமது உள் தோல்விகளை நாம் ஆராய வேண்டிய நேரம் இது.
மக்கள் போராட்டத்தின் புதியக் கதையை உருவாக்குவோம்
உண்மையில் எங்களின் ஆசை என்னவென்றால், மக்கள் எஜமானர்களாக மாற வேண்டும், அடிமைகள் அவர்களின் எஜமானர்களை எதிர்த்து போராட வேண்டும், விவசாயிகள் நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கு எதிராக போராட வேண்டும், முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் போராட வேண்டும் என்பதே. 99 விழுக்காட்டு மக்கள் 1 விழுக்காடு பணக்காரர்களுக்கு எதிராகப் போராட வேண்டும்.
மக்கள் மேலாதிக்கம், இனவாதக் கட்சிகளின் மேலாதிக்கத்தை மாற்ற வேண்டும். 1970-களுக்கு முன்பு இருந்ததைப் போல, வர்க்கப் போராட்டம் மீண்டும் ஒரு பெரிய போராட்டமாக உருவெடுக்க வேண்டும்.
1945 – 1948 இல் இருந்த புத்ரா-ஏ.எம்.சி.ஜே.ஏ. (PUTERA-AMCJA) இயக்கத்தைப் பார்த்தால், அது பி.எம்.ஃப்.தி.யு. (PMFTU) போன்ற தொழிலாளர் அமைப்புகள் மற்றும் பாதாஸ் (BATAS) போன்ற விவசாய இயக்கங்கள் மூலம், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் இன்னல்களை வலியுறுத்தும் வர்க்கப் போராட்டமாகும். 1974-ஆம் ஆண்டின் மாணவர் இயக்கத்தைப் பார்த்தால், அவர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பைப் பாதுகாக்கும் இயக்கமாக இருந்தனர், அங்கு அவர்கள் ஜொகூரில் உள்ள தாசெக் உத்தாரா மற்றும் கெடாவில் உள்ள பாலிங்கில், மர்ஹேன் மக்களுடன் இறங்கினர். அந்த நேரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் சாதாரண மக்களுடன் இருந்தனர். அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை முன்வைத்தனர், இனவெறி அல்லது மதத்தின் பிரச்சினைகளை அல்ல.
இருப்பினும், புதியப் பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, சோசலிச முன்னணி மற்றும் இடதுசாரி அரசியல் கட்சிகளின் சரிவு, பின்னர் தொழிலாளர் வர்க்கம் மற்றும் கீழ் வர்க்க அரசியல் ஆகியவை இன மற்றும் மத அரசியலால் மாற்றப்பட்டன, இனப்பிரச்சினைகள் முக்கியக் கதையாகின. நாம் வர்க்கப் போராட்டத்திற்குத் திரும்ப வேண்டும். சமூக ஊடகங்களில் மட்டுமல்லாமல், உண்மையான உலகில், உண்மையான வலிமையுடன் நாம் மக்கள் சக்தியை உருவாக்கப் போராட வேண்டும்.
மக்கள் போராட்டத்தின் புதிய கதை இனி, இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது. இது சுயத்திற்காகவும் தற்காலிகமாகவும் இருக்கக் கூடாது. கீழ்மட்ட மக்களிடம் இருந்து ஓர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த இயக்கம் விளிம்புநிலை மக்களின் அனைத்து போராட்டங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், அதன்வழி ஒடுக்கப்பட்ட மக்கள் வர்க்கத்தின் வலிமையை உருவாக்க முடியும். இந்தப் போராட்டத்தில், அரசியல் சக்தியைக் கீழிருந்து திரட்டப்பட வேண்டிய ஒரு திட்டம் இருக்க வேண்டும். நாம் இன்று தோல்வியடைகிறோம் என்பதை இந்த இயக்கம் உணர வேண்டும். ஆனால், நாளை ஒரு பெரிய மற்றும் பிரகாசமான போராட்டம் நமக்காகக் காத்திருக்கிறது.
எஸ் அருட்செல்வன், பி.எஸ்.எம். துணைத் தலைவர்
தமிழாக்கம் : சாரணி சூரியமதன்