17,672 புதிய நேர்வுகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் தொற்று எண்ணிக்கையில் சரிவு

இன்று, 17,672 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் (4,316) கடந்த 35 நாட்களில் முதல் முறையாக, 5,000-க்கும் குறைவான புதிய தொற்றுநோய்களைப் பதிவு செய்தது.

அம்மாநிலத்தில், தனிமைப்படுத்துதல் மையங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கையும், கடந்த வாரம் கோவிட் -19 தொற்றுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்துள்ளன. சிலாங்கூர் மருத்துவமனைகளில் தீவிரச் சிகிச்சைப் பிரிவின் (ஐசியு) படுக்கை பயன்பாடும், கடந்த வாரத்தில் இருந்து சீராக உள்ளது.

இதற்கிடையில், இன்று 174 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 14,342 –ஆக உயர்த்தியுள்ளது.

மேலும் இன்று, 19,053 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,040 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 502 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (4,316), சபா (2,474), கெடா (1,602), சரவாக் (1,538), பினாங்கு (1,451), ஜொகூர் (1,367), கிளந்தான் (1,176), பேராக் (952), கோலாலம்பூர் (891), பகாங் (506), நெகிரி செம்பிலான் (478), திரெங்கானு (470), மலாக்கா (363), பெர்லிஸ் (57), புத்ராஜெயா (24), லாபுவான் (7).