ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெற்ற, கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், பங்கேற்பாளர்கள் செலுத்த வேண்டிய RM62,000 சலுகைத் தொகைக்குப் பொது மக்களின் நன்கொடைகளை நாடியுள்ளனர்.
கடந்த வாரம், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 பேர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, தலா RM2,000 தண்டம் என, மொத்தமாக RM62,000 தண்டம் விதிக்கப்பட்டது.
இன்று ஓர் அறிக்கையில், பொதுமக்களால் தங்கள் சுமையைக் குறைக்க உதவ முடியும் என்று மக்கள் ஒற்றுமை செயலகம் (எஸ்.எஸ்.ஆர்.) நம்பிக்கை தெரிவித்தது.
“எங்களுக்கு விதிக்கப்பட்ட தொகையைச் செலுத்த உதவுமாறு, நாங்கள் ஜனநாயகத்தை நேசிக்கும் மலேசியர்களிடம் கேட்க விரும்புகிறோம்,” என்று அவர்கள் கூறினர்.
நன்கொடைகள் பற்றிய தகவல்களை இங்கு பெறலாம்.
“செயலகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சக வழக்கறிஞர்கள் பலருடன் விவாதித்து வருகிறது, கைதுகள் அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் தடுத்து வைக்கப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு ஆஜராக வழக்கறிஞர் அனுமதி இல்லை,” என்று எஸ்எஸ்ஆர் மேலும் கூறியது.
நேற்று, மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் தங்கள் கைது சட்டவிரோதமானது என்றும், நிகழ்வின் போது காவல்துறையினர் தங்கள் உரிமைகளை மறுத்தனர் என்றும் கூறி ஒரு போலீஸ் அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை இரவு, டத்தாரான் மெர்டேகாவில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, வழக்கறிஞர்கள் உட்பட சிலரைக் காவல்துறையினர் அழைத்துள்ளனர்.
இந்த நிகழ்வின் போது, அந்த 31 நபர்களிடம் காவல்துறையின் கொடூரமான நடத்தையைப் பல மனித உரிமை குழுக்கள் விமர்சித்தன.
பங்கேற்பாளர்களில் ஒருவரான, மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) மத்திய செயற்குழுவினரான சோங் யீ ஷான், ஐந்து காவல்துறையினர் அவரைப் போலீஸ் வாகனத்திற்கு இழுத்துச் சென்றதால், தனக்கு உடல் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்), கைதிகளுக்கு ஒரு வழக்கறிஞருக்கான உரிமையை மறுப்பது கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 5 மற்றும் பிரிவு 10-ஐ மீறுவதாகும்.
அமைதியான முறையில் கூடுவதற்கான மக்களின் உரிமையை அங்கீகரிக்க வேண்டுமென காவல்துறையை ஆணையம் கேட்டுக் கொண்டது.