`சபாநாயகர் பதவியைப் பிரதமர் முடிவு செய்வார்` – அஸார்

அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், மக்களவை சபாநாயகராக அவரது சேவைகள் தொடருமா இல்லையா என்பதை முடிவு செய்ய, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பிடம் விட்டுவிட்டதாக அஸார் ஹருன் கூறினார்.

“நான் மக்கலவையின் பெரும்பான்மையினரின் தயவால் சபா நாயகர் ஆனேன். பெரும்பான்மை சபையை வழிநடத்தும் பிரதமர் தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று அவர் சொன்னதாக உத்துசான் மலேசியா கூறியுள்ளது.

முஹைதீன் யாசின் நிர்வாகத்தின் போது, அஸார் தனது முன்னோடி முகமட் ஆரிஃப் முகமட் யூசோப்புக்குப் பதிலாக மாற்றப்பட்டார்.

ஆகஸ்ட் 23-ம் தேதி, பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸலினா ஓத்மான் சைட், மக்களவை துணை சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார்.

அண்மையில், வலையரங்கம் ஒன்றில், காலி செய்யப்பட்ட துணை சபாநாயகர் இருக்கையை எதிர்க்கட்சிகளால் நிரப்ப வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

இந்த நடவடிக்கை, நாடாளுமன்ற சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை தொடர, இஸ்மாயிலுக்குச் சிறந்த வாய்ப்பாக அமையும் என்றார்.

இதற்கிடையில், அஸார் தனது கடமைகள் முழுவதும் அவர் விதிமுறைகளின்படி தன்னால் முடிந்ததைச் செய்தார் என்று கூறினார்.

“நான் எனது அனைத்து கடமைகளையும், நடைமுறை விதிகள் மற்றும் கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு ஏற்ப செய்து வந்துள்ளேன். நான் எந்தக் கட்சிக்கும் அநியாயம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் நான் மறுக்கிறேன்.

“உண்மையில், சபா நாயகரான எனக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.