திருச்சி, மத்தியச் சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம், தமிழ் நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி இதனைத் தெரிவித்தார்.
கடவுச்சீட்டு வழக்கில், தண்டனை காலம் முடிந்தும், தமிழ்நாடு அரசு அவர்களை விடுவிக்காமல் தொடர்ந்து தடுத்து வைத்துள்ளது. தங்களது விடுதலைக்காக எவ்வித முயற்சியும் நடைபெறாத நிலையில், ஆகஸ்ட் 18-ம் தேதி, 16 பேர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டும், ஒருவர் தன்னைத் தானே காயப்படுத்தியும், மற்றும் இருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
“அதுமட்டுமின்றி, ம. நிருபன் (26), செ. முகுந்தன் (26) ஆகிய இருவரும், ஆகஸ்ட் 10-ம் தேதி முதல், சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது மிகுந்த வேதனையை அளிக்கிறது,” என்று பாலமுருகன் தெரிவித்தார்.
இலங்கை, சிங்களப் பவுத்த இனவெறி அரசால் திட்டமிட்ட தமிழின அழிப்பு போரில், ஈழத் தாய்த்தமிழ் உறவுகள் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு அடைக்கலம் தேடி சிதறியது இன்றளவும் உலகத் தமிழினத்தின் மனங்களில் ஆறாத வடுவாக அமைந்துள்ளது என்றார் அவர்.
மீண்டும் அப்படியொரு நிலை ஏற்படாமல் இருக்க, தமிழக முதல்வர் தலையிட்டு பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் முன்னெடுக்குமாறு உலகத் தமிழர்கள் சார்பில், உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கோரிக்கை வைப்பதாக அவர் சொன்னார்.
இதன் தொடர்பாக, தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேரடியாக கடிதம் ஒன்றினை அனுப்பி இருப்பதையும் அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.