ஒவ்வொரு அமைச்சும் பொறுப்பேற்ற முதல் 100 நாட்களுக்குள், அவரவர் அமைச்சின் அடைவுநிலையை நீரூப்பிக்க வேண்டுமென தனது அமைச்சரவைக்குப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நிபந்தனை விதித்துள்ளார்.
இன்றைய அமைச்சரவை அறிவிப்பில், இஸ்மாயில் ஒவ்வொரு அமைச்சும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்களைச் செய்ய வேண்டும் என்றார்.
“இந்த அமைச்சரவை அதிகச் செயல்திறன் கொண்ட வேலை கலாச்சாரத்தை வலியுறுத்துகிறது என்பதை நான் உறுதி செய்வேன்.
“எனவே, ஒவ்வொரு அமைச்சும் குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை வகுத்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய வேண்டும்.
“அதற்காக, ஒவ்வொரு அமைச்சும் முதல் 100 நாட்களுக்குள் அதன் ஆரம்ப அடைவுகளை நிரூபிக்க வேண்டும்,” என்று அவர் இன்று தனது அறிவிப்பின் போது கூறினார்.
நாட்டிற்குப் பொருளாதார மீட்சி தேவை என்பதை ஒப்புக்கொண்ட இஸ்மாயில், தனது அமைச்சரவை வரிசை மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றார்.
அந்தக் கொள்கைகள் தற்போதைய தேவைகளுக்கு அதிக சவாலான உணர்திறன், பொறுப்பு மற்றும் நம்பிக்கை அத்துடன் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதாக இருக்க வேண்டும்.
தேசிய மீட்புத் திட்டத்தின் (பிபிஎன்) வழிகாட்டுதலுக்கு ஏற்ப, மக்கள் வேலை செய்யத் தொடங்குவதற்கும், பாதுகாப்பாக வாழ்வதற்கும், சம்பாதிக்கவும் பொருளாதார நடவடிக்கைகள் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும்.
“அமைச்சரவை அனுபவம் வாய்ந்தவர்களின் கலவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதன் மூலமும், வணிகத்தை எளிதாக்குவதன் மூலமும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதன் மூலமும் நாட்டின் பொருளாதாரத்தைப் புதுப்பிக்க உதவும் என்று நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
மாட்சிமை தங்கியப் பேரரசர், கோலாலம்பூர், இஸ்தானா நெகாராவில், ஆகஸ்ட் 30-ம் தேதி, மதியம் 2.30 மணிக்குப், பதவியேற்பு விழா மற்றும் இரகசியப் பிரமாணத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் இஸ்மாயில் சொன்னார்.