பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் உருவாக்கிய அமைச்சரவையை, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் கடுமையாக சாடினார்.
நேற்று காலை, புதிய அமைச்சரவை அறிவிப்பில், ஐந்து அமைச்சர்களும் நான்கு துணை அமைச்சர்களும் மட்டுமே புதியவர்கள்.
மீதமுள்ள 26 அமைச்சர்களும் (இஸ்மாயில் சப்ரி தவிர) மற்றும் 34 துணை அமைச்சர்களும் ஒரே அந்தந்த அமைச்சுகளிலேயே தக்கவைக்கப்பட்டனர் அல்லது மாற்றப்பட்டனர்.
“கோவிட் -19 தொற்றின் விளைவாக நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, இதனால் மக்கள், குறிப்பாக கீழ் வகுப்பினர் மிகவும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர், பொருளாதாரப் பிரச்சனைகளால் மன அழுத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.
“ஆனால், இதுவரை செயல்திறனைக் காட்டாத, இந்தப் பிரச்சனையைத் திறம்பட தீர்க்க முடியாதவர்களால், அவர் (இஸ்மாயில் சப்ரியால்) அமைச்சரவையை மறுசுழற்சி செய்துள்ளார்,” என்று அவர் முகநூல் வழியாக கூறினார்.
இஸ்மாயில் சப்ரி, அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் அவர்களின் செயல்திறனைக் காட்ட, 100 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாக அன்வர் குறிப்பிட்டார்.
இருப்பினும், பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின் தலைமையிலான முந்தைய அமைச்சரவையில் இருந்தபோது, பாராட்டுக்குரிய செயல்திறனைக் காட்டத் தவறிய அவர்களில் பெரும்பாலோர், எப்படி தங்கள் செயல்திறனைக் காட்டுவர் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“அமைச்சரின் செயல்திறனைக் காட்ட பிரதமர் 100 நாட்கள் கால அவகாசத்தை அளிக்கிறார்.
“கடந்த ஆண்டின் ஒரு பாதியில், பாராட்டத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை,” என்று அவர் கூறினார்.
இஸ்மாயில் சப்ரி அறிவித்த அமைச்சரவை “மிகவும் ஏமாற்றமளிக்கிறது” என்று அன்வர் மேலும் விவரித்தார்.
உள்நாட்டு அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு “உறுதியற்ற” அமைச்சரவை நம்பிக்கையை அளிக்க முடியாது என்று அவர் கூறினார்.
“நாங்கள் இப்போது எதிர்பார்ப்பது ஒரு மாற்றம், ஆனால் அது நடக்கவில்லை.
கோவிட் -19 பிரச்சனையை எதிர்கொள்வதற்கும், மக்களின் வாழ்வில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கும் மிகவும் வலுவான மற்றும் பயனுள்ள செயல் திட்டம் இல்லையென்றால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்காணித்து, உரத்த குரல் கொடுப்போம் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் அன்வர் கூறினார்.