கு லி : `அமைச்சரவை உறுப்பினர்களின் சம்பளம் பாதியாக குறைக்கப்படட்டும்!`

நேற்று, இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்த புதிய அமைச்சரவை, பல தரப்பினரின் விமர்சனத்திற்கு உள்ளான போதும், மூத்த அம்னோ தலைவர் ஒருவர், அவர்களுக்காக “பிரார்த்தனை” செய்யுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

முஹைதீன் யாசினின் நிர்வாகத்தின் கீழ் கிடைத்ததைவிட, பாதி குறைவான சம்பளம் இந்த அமைச்சர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென பிரார்த்திக்குமாறு, தெங்கு ரசலே ஹம்சா பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

இஸ்மாயில் சப்ரியின் அமைச்சரவை குறித்து, உண்மையில் அவரால் அதிகம் கருத்து தெரிவிக்க முடியவில்லை என்று அம்னோ ஆலோசனைக் குழுவின் தலைவரான அவர் சொன்னார்.

“நிச்சயமாக, இந்த அமைச்சரவை பட்டியல் அம்னோவை ஏமாற்றம் அடைய வைத்திருக்கும்.

“அவர்களின் சம்பளம் முஹைதீனின் கீழ் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தொகையில் பாதியாகக் குறைக்கப்பட வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

நேற்று காலை, பிரதமரால் வெளியிடப்பட்ட அமைச்சரவை பட்டியலில், மொத்தம் 31 அமைச்சர்களும் 38 துணையமைச்சர்களும் அரசாங்கத்தில் சேர நியமிக்கப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் முன்பு முஹைதீனின் கீழ் பணியாற்றிய அதே முகங்கள்தான்.

எனவே, பெர்சத்து தலைவரின் அமைச்சரவையை இஸ்மாயில் சப்ரி மறுசுழற்சி செய்துள்ளார் என்று சிலர் நினைக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் இஸ்மாயில் சப்ரியின் புதிய அரசாங்கத்தைத் தேசியக் கூட்டணி 2.0 (தே.கூ. 2.0) அரசு எனக் கூறுகிறார்கள்.

இதற்கிடையில், இந்த அறிவிப்பு பலரை ஏமாற்றமடைய வைத்தது என்பதை உணர்ந்த போதும், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், இஸ்மாயில் சப்ரியின் அமைச்சரவையைத் தற்காத்து பேசியுள்ளார்.