‘புதிய தலைமை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ – உண்ணாவிரதப் போராட்டக்காரர்கள்   

ஆர்வலரும், தகவல் தொடர்பு ஆலோசகருமான நதானியேல் தான், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டபோது, ​​கோவிட் -19 தொற்றுநோயைச் சமாளிக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் வரை, தனது உண்ணாவிரதத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், பிரதமர் முஹைதீன் யாசின் இராஜினாமா காரணமாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே உண்ணாவிரதம் ஆகஸ்ட் 16-ம் தேதி நிறுத்தப்பட்டது.

கிட்டத்தட்ட 13 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற நதானியலும் மலேசியப் பஞ்சாபி இளைஞர் இயக்கத் (ஜி.பி.எஸ்.எம்.) தலைவர் குர்பிரீத் சிங்கும், முஹைதீன் இராஜினாமா செய்த போதிலும், அது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதற்கான அறிகுறி அல்ல என்று கூறியுள்ளனர்.

“இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் நோக்கம், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய செயல்களின் வரம்பைக் காட்டுவதாகும்.

“முஹைதீனின் இராஜினாமா என்பது நாங்கள் விரும்பிய அனைத்து மாற்றங்களையும் பெற்றுவிட்டதாக அர்த்தமல்ல என்றாலும், மாற்றங்கள் வர இது ஒரு நம்பிக்கைக்குரிய தொடக்கம் என்று நாங்கள் நினைக்கிறோம்.

“(முஹைதீன் இராஜினாமா செய்த பிறகு) அவர் விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என்று நாங்கள் நினைக்கிறோம், மேலும் மெய்நிகர் போராட்டத்தில் எங்கள் முயற்சிகளை நாங்கள் மையப்படுத்தலாம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

மெய்நிகர் போராட்டம் இதுவரை வெற்றிகரமாக உள்ளது என்றும், நீண்ட காலத்திற்கு இது மிகவும் பயனுள்ள முறை என்றும் குர்பிரீத் கூறினார்.

இத்தகைய மெய்நிகர் போராட்டம் வீட்டில் பட்டினி கிடப்பது, வெறுமனே தண்ணீர் குடிப்பது மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குச் சிறிய அளவில் சாப்பிடுவது ஆகியவை அடங்கும்.

தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில், ஒரு கட்டிடத்தின் நடைபாதையில், ஐந்து நாள்கள் உண்ணாவிரதம் இருந்த நதானியேல், ஆகஸ்ட் 9-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தியபோது, குர்பிரீத் அதில் பங்கேற்ற இரண்டாவது நபர் ஆவார்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள, சுவாரா ராக்யாட் மலேசியா (சுவாராம்) அலுவலகம் முன்பு குர்பிரீத் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

குர்பிரீத் தனது நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை அல்ல என்றும், “மக்கள் போராட்டத்தை உருவாக்க” மட்டுமே முயன்றதாகவும் கூறினார்.

“இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, ​​மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதைக் காட்ட அரசாங்கத்தின் பார்வையில் புலப்படும் அடையாளமாக நான் விளங்க விரும்பினேன்.

“நிறைய பேர் வேலை இழந்துள்ளார்கள், ஒவ்வொரு இரவும் பசியுடன் தூங்குகிறார்கள். எனவே, அந்த வகையான அடையாளத்தை உருவாக்குவது எங்களுக்கு முக்கியம்,” என்று அவர் கூறினார்.

கோவிட் -19 தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை நிபுணர்களிடம் ஒப்படைக்க வேண்டும், மருத்துவமனைகளுக்கு 500 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி, வெளிப்படையான தரவு பகிர்வு மற்றும் முனைமுக ஊழியர்களுக்குப் பாதுகாப்பு போன்று ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, நதானியலும் குர்பிரீதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.