கோவிட் -19 தொடர்பான அனைத்து தடுப்பூசி திட்டங்களும் சுகாதார உத்திகளும் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் கைரி ஜமாலுதீன் அபு பக்கர் மூலம், சுகாதார அமைச்சால் மட்டுமே கையாளப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
முன்னாள் சுகாதார அமைச்சரான டாக்டர் ஆடாம் பாபா தலைமையிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு (மோஸ்தி), தொற்றுநோய்க்கான தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (ஆர் & டி) கவனம் செலுத்தும் என்றார்.
“கடந்த காலத்தில், கோவிட் -19 தொடர்புடைய இரண்டு அமைச்சுகள் – கே.கே.எம் மற்றும் மோஸ்தி – அதாவது இரண்டு அமைச்சர்கள், இரண்டு பொதுச் செயலாளர் மற்றும் இரண்டு தலைமை இயக்குநர்கள் ஆகியோர் கொண்ட குழு … இரண்டு இருந்தால் அது கடினமாகலாம், ஏனென்றால் அவர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கலாம்.
“மோஸ்தி தனது சொந்த தடுப்பூசியைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தும், தாய்லாந்து தனது சொந்த தடுப்பூசியைத் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது, மலேசியாவும் அதன் சொந்த தடுப்பூசியைத் தயாரிக்க முடியும், ஏனெனில் கோவிட்-19 தொற்றுநோய் டிங்கி போன்று தொடர்ந்து நமது சுற்றுச்சூழலில் இருக்கும், அதற்கு தடுப்பூசி தேவை.
“எனவே, நாம் வெளிநாடுகளைச் சார்ந்து இருக்காதபடி மோஸ்தி கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் நேர்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, நாம் வெளியில் இருந்து (தடுப்பூசிகளின் விநியோகத்தை) சார்ந்து இருந்தால், அது விநியோகத்தைப் பாதிக்கும். சொந்த தடுப்பூசிகள் என்றால், நிலைமை வித்தியாசமாக இருக்கும்,” என்று அவர், இன்று, பஹாங், பெரா, கம்போங் பாத்து போரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
தடுப்பூசி பற்றி பேசியபோது, சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவிடம், தொழிற்சாலைகளில், குறிப்பாக அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ள தொழிற்சாலைகளில் தடுப்பூசி மையங்களை (பிபிவி) அமைக்க அனுமதிக்குமாறு கூறியுள்ளதாக இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
“தொழிற்சாலைகள் தங்கள் ஊழியர்களுக்காக சொந்த தடுப்பூசிகளை வாங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், இது தடுப்பூசியை வேகமாக நகர்த்தும். 80 விழுக்காடு ஊழியர்கள் இரண்டு மருந்தளவுகள் தடுப்பூசி முடித்திருந்தால் அத்தொழிற்சாலை மீண்டும் செயல்படலாம்.
இதற்குப் பிறகு அரசாங்கம் தடுப்பூசியைக் கட்டாயமாக்க விரும்புகிறதா என்று கேட்டதற்கு, தடுப்பூசி போடாதவர்கள் மற்றவர்களைப் பாதிக்கலாம் என்ற அச்சத்தில் அது கட்டாயமாக்கப்படலாம், அதே நேரத்தில் நாட்டின் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முன்னுரிமை என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.
நேற்று அறிவிக்கப்பட்ட அவரது அமைச்சரவை பட்டியலில், துணைப் பிரதமரின் பெயர் இல்லாதது குறித்து கேட்டபோது, பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக தனது நாடாளுமன்றத் தொகுதிக்குத் திரும்பிய இஸ்மாயில் சப்ரி இவ்வாறு கூறினார் :-
“முதலில் (முன்னாள் பிரதமர்) முஹைதீன் யாசினின் அமைச்சரவையில் கூட இல்லை. ஆக, முன்பு போல் அது இருக்காது, ஆனால் பிறகு உருவாக்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.