பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், நேற்று பஹாங்கில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பியபோது அவரது பெற்றோரின் கல்லறைக்குச் சென்றார்.
இந்த வருகை சில சமூக ஊடகப் பயனர்களின் விமர்சனத்திற்கு ஆளானது.
அவரின் வருகை குறித்த ஆஸ்ட்ரோ அவானியின் செய்தி, 1,000-க்கும் மேற்பட்ட கருத்துகளைப் பெற்றது, அவற்றில் பெரும்பாலானவைப் பிரதமரை விமர்சித்தவை.
“இரண்டு வருடங்கள் என் அம்மாவின் கல்லறைக்குச் செல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை! இரண்டு வருடங்கள்!” என்று ஒரு கீச்சகப் பயனர் கூறினார்.
ஐனா என்று மட்டுமே அறியப்பட்ட மற்றொருவரும் பிரதமரின் வருகையைக் கேள்விக்குள்ளாக்கினார்.
“கல்லறைக்குச் செல்ல முடியாதுதானே? நான் நீண்ட காலமாக என் தந்தையின் கல்லறைக்குச் செல்லவில்லை, தயவுசெய்து எனக்கு அனுமதி கொடுங்கள்.
“கடைசியாக நோன்பு மாதத்தில் சென்றது, பிகேபி என்பதால் செல்லவில்லை,” என்று ஐனா கூறினார்.
சாதாரண மக்கள் கல்லறைகளுக்குச் சென்றால் அவர்களுக்குத் தண்டம் விதிக்கப்படும் என்று பலர் கூறுகின்றனர்.
தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.) தற்போதைய எஸ்ஓபியை மறுஆய்வு செய்தபோது, கல்லறைகளுக்குச் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கண்டறியப்பட்டது.
எவ்வாறாயினும், மே மற்றும் ஜூலை மாதங்களில் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டங்களின் போது, கல்லறைகளுக்க்ச் செல்வதை எஸ்.ஓ.பி.க்கள் தடை செய்தன.
ஜூலை 21-ம் தேதி, கல்லறைக்குச் சென்றதற்காக, நெகிரி செம்பிலான், ஜெம்போலைச் சேர்ந்த ஒருவருக்கு ரிம 2,000 தண்டம் விதிக்கப்பட்டது.
எம்.கே.என். தலைமை இயக்குனர் ரோட்ஸி முஹமட் சாஆட், பண்டிகை காலத்திற்கு வெளியே கல்லறை வருகை அனுமதிக்கப்படுகிறது என்று ஹரியான் மெட்ரோவிடம் விளக்கியுள்ளார்.
“பண்டிகை காலத்திற்கு வெளியே, கல்லறைகளுக்குச் செல்வது ஒரு பிரச்சனை அல்ல, அனுமதிக்கப்படுகிறது.
“முக்கியமான விஷயம் என்னவென்றால், கல்லறைகளுக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் மற்றும் முகக்கவரிகளை அணிய வேண்டும்,” என்று ரோட்ஸி கூறினார்.