இஸ்மாயில் சப்ரியின் முழு அமைச்சரவை சிறப்பானது என்றால், கேஜே மட்டும் ஏன தனித்துவமாக தெரிகிறார்? – கடீர்

ஆகஸ்ட் 20-ம் தேதி, இஸ்மாயில் சப்ரி யாகோப் நாட்டின் ஒன்பதாவது பிரதமரானபோது, ​​புதிய அமைச்சரவையில் பல புதிய முகங்கள் அம்னோ துணைத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள் என்று சில ஆய்வாளர்கள் ஆருடம் கூறினர்.

புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட இஸ்மாயில், முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி (தே.கூ.) நிர்வாகத்தின் ‘தோல்வியடைந்த அரசாங்கம்’ என்ற பிம்பத்தை மாற்ற முடியும் என்று கூறப்பட்டது.

அப்படியிருந்தும், அவர் பிரதமராக நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அமைச்சரவை பட்டியலை அறிவிப்பது முந்தைய தே.கூ. நிர்வாக அமைச்சரவையின் ‘மறுசுழற்சி’ என்று சில தரப்பினரால் விமர்சிக்கப்பட்டது.

மூத்த பத்திரிக்கையாளர் ஏ கடீர் ஜாசின் கருத்துப்படி, இஸ்மாயிலின் அமைச்சரவை “பழைய பெர்சத்து தலைமையிலான அமைச்சரவையை விட சிறந்ததோ அல்லது உறுதியானதோ அல்ல.”

“முஹைதீனின் அமைச்சரவை ஒரு சிறிய பரிசோதனையுடன் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது, அம்னோவில் இருந்து சில நச்சுத் தலைவர்களைக் கொண்டுவந்துள்ளது.

“ஆமாம், கழிவு மறுசுழற்சி நல்லதுதான். இது சுற்றுச்சூழலை சுத்தப்படுத்த உதவும். ஆனால், அணுக்கழிவுகள் போன்ற மறுசுழற்சி செய்ய முடியாத அளவுக்கு அழுக்கு மற்றும் நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளும் உள்ளன,” என்று அவர் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் கிண்டலாகக் கூறினார்.

அதனால்தான், கைரி ஜமாலுடின் மட்டும் தனித்து நின்று பல தரப்பினரின் கவனத்தை ஈர்க்கிறார் என்று கடீர் கூறினார்.

“இஸ்மாயில் சப்ரியின் அமைச்சரவை சிறந்து விளங்குகிறது என்றால், கைரி ஜமாலுடின் தவிர, ஏன் மற்றவர்கள் வர்ணனையாளர்களையும் சமூக ஊடக ஆர்வலர்களையும் ஈர்க்கவில்லை,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் கருத்து தெரிவித்த கடீர், கோவிட் -19 தொற்றுநோயை நிர்வகிக்கத் தவறியதாகக் கூறப்படும், முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி போன்றவர்கள் அமைச்சரவையில் தக்கவைக்கப்பட்டதை, ‘மறுசுழற்சி’ அமைச்சர்கள் என்று மேற்கோள் காட்டினார்.

பல வர்ணனையாளர்களும் சமூக ஊடகப் பங்கேற்பாளர்களும் நேர்மறையான கருத்துக்களை வழங்கியபோதும், புதிய சுகாதார அமைச்சரான கைரி மீது “அதிக நம்பிக்கை” வைத்துள்ளனர் என்று கடீர் மேலும் விளக்கினார்.

“சர்ச்சை இல்லாமல் இல்லை என்றாலும், கைரி மிகவும் வெற்றிகரமான ஒருவராக காணப்பட்டார்,” என்று கடீர் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

தேசியத் தடுப்பூசி திட்டத்தைக் கையாள்வதில், ஆரம்பத்தில் சில பலவீனங்களும் சர்ச்சைகளும் இருந்தபோதிலும், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) ஒருங்கிணைப்பு அமைச்சரான கைரி, முஹைதீனின் அரசாங்கத்தில் 17 மாதங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார்.

முஹைதீனின் அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் என்று – 70 அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்கள் – கடந்த காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், இஸ்மாயில் அதே எண்ணிக்கையைப் பராமரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணை தக்கவைப்பது மட்டுமல்லாமல், முஹைதீனின் அனைத்து நியமனங்களையும் இஸ்மாயில் தக்க வைத்துக் கொண்டார்.

இஸ்மாயிலைத் தவிர்த்து, ஐந்து புதிய அமைச்சர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர், 16 அமைச்சர்கள் அதே இலாகாக்களில் தக்கவைக்கப்பட்டனர், மேலும் 10 அமைச்சர்கள் மாற்றப்பட்டனர்.

துணை அமைச்சர்களைப் பொறுத்தவரை, நான்கு புதிய முகங்கள் மட்டுமே நியமிக்கப்பட்டன, அதே நேரத்தில் 23 பேர் தக்கவைக்கப்பட்டனர் (அதே அமைச்சு உட்பட), மேலும் 11 பேர் மாற்றப்பட்டனர்.

இஸ்மாயில் அமைச்சரவைக்குக் கொண்டுவரப்பட்ட ‘புதிய முகங்கள்’ சில, தேசிய முன்னணி காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் ஆவர்.